உள்ளூர் செய்திகள்

கோயிலும் பிரசாதமும் - 27

பழநி பஞ்சாமிர்தம்முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமி மலை, திருத்தணி, சோலைமலை ஆகியன. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூன்றாவது படைவீடு. தண்டாயுதபாணி கோயிலில் பல்லாண்டு காலமாக தரப்படும் பிரசாதம் பஞ்சாமிர்தம். வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, பேரீச்சம்பழம், கற்கண்டு, தேன் முதலான ஐந்து பொருட்களைப் பிரதானமாகக் கொண்டு பிரசாதம் தயாரிக்கப்படுவதால் 'பஞ்சாமிர்தம்' எனப்பட்டது. பஞ்சாமிர்தத்தில் சுவையைக் கூட்ட நெய், ஏலக்காய்த்துாள் சேர்க்கப்படுகிறது. பழநி தண்டாயுதபாணி கோயிலில் விளா பூஜை, சிறுகாலசந்தி, காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை ராக்காலம் என ஆறு கால பூஜை நடக்கிறது. மூலவரின் அபிஷேகத்திற்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய நான்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.மார்கழியில் பன்னீர் பயன்படுத்துவர். தினமும் ஆறு முறை மூலவருக்கு அபிஷேகம் அலங்காரம் செய்கின்றனர். கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழத்திற்காக முருகன் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலமாகையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் வேறெங்கும் இல்லாதவிதமாக இத்தலத்தில் பஞ்சாமிர்தம் பிரசித்தி பெற்று விளங்குகிறது.ஒருநாள் நாரதர் ஞானப்பழம் ஒன்றை கொண்டு வந்து சிவனிடம் கொடுத்தார். “இந்த பழத்தைப் பங்கிடாமல் ஒருவரே உண்ண வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்” என்றார். விநாயகரும், முருகனும் பழம் எனக்கே என போட்டியிட்டனர். சிவபெருமானோ, “உங்களில் யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறீர்களோ அவருக்கே பழம்” என்றார். உடனே மயில் வாகனத்தில் சுற்ற ஆரம்பித்தார் முருகன். பெற்றோரையே உலகமாகக் கருதி சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றுக் கொண்டார் விநாயகர். மயிலில் உலகைச் சுற்றி வந்த முருகன் நடந்ததை அறிந்து கோபம் கொண்டார். பெற்றோரை விட்டு பிரிந்து பழநியில் துறவியானார். சுவாமி குழந்தை வடிவமாக நின்ற காரணத்தால் 'குழந்தை வேலாயுதர்' எனப் பெயர் பெற்றார். முருகப்பெருமானை “பழம் நீ” அதாவது நீயே ஞானமே வடிவம் கொண்டவன் என அவ்வையார் கூறியதால் இத்தலம் பழநி என்றானது. பழநி மலையின் உச்சியில் முருகன் மேற்கு நோக்கியபடி ஆண்டி கோலத்தில் கையில் கோல் அதாவது மரத்தண்டுடன் காட்சி தருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலத்தின் மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர்.நவபாஷாணம் எனும் அரிய மூலிகையால் உருவான இவர், போகரால் உருவாக்கப்பட்டவர். உற்ஸவர் முத்துக்குமாரசாமி. கோயிலின் மேற்கில் இரண்டு கி.மீ., தொலைவில் ஓடும் சண்முகநதியே புனித தீர்த்தம். கோயிலின் தல விருட்சம் நெல்லி மரம். விளாபூஜையின் போது மூலவருக்கு அன்னம், நெய்யுடன் கூடிய புளியில்லா பொரித்த கூட்டு, சுக்கும், சர்க்கரையும் சிறுகாலசந்தியின் போது சாம்பார்சாதம், வெண்ணெய், கோதுமை ரொட்டியும், காலசந்தியின் போது வெண்பொங்கல், உச்சிக்கால பூஜையின் போது தயிர்சாதம், புளிசாதம், பால்பாயாசம், அன்னமும், சாயரட்சையின் போது புளிசாதம், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் நைவேத்யம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் முதன்முதலாக கோயில் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு பெற்ற பெருமை பழநி பஞ்சாமிர்தத்திற்கு உண்டு. தரமான பஞ்சாமிர்தம் தருவதற்காக நவீன முறையில் தானியங்கி இயந்திரம் மூலம் சுகாதாரமான முறையில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. தைப்பூசம் இங்கு முக்கிய திருவிழா. தைப்பூசத்தன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், சூரசம்ஹார விழாக்கள் பழநியில் விமரிசையாக நடக்கிறது. காலை 6:00 - இரவு 9:00 மணி வரை கோயில் திறந்திருக்கும். தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, மாத கார்த்திகை நாட்களில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். மலைக் கோயிலை படியேறி அடையலாம். ரோப்கார் வசதியும் உள்ளது. வின்ச் எனப்படும் மின் இழுவை ரயில் வசதியும் உண்டு. சுலபமாக மலையேற யானைப்பாதை என்றொரு வழியும் உண்டு. பஞ்சாமிர்தம் செய்ய தேவையான பொருட்கள்மலை வாழைப்பழம் - 5 நாட்டுச்சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்பேரீச்சம்பழம் - 10 (விதை நீக்கியது)கற்கண்டு - 1 டேபிள் ஸ்பூன்தேன் - 2 டேபிள் ஸ்பூன்நெய் - 3 டேபிள் ஸ்பூன்ஏலக்காய்த்துாள் - சிறிதளவுசெய்முறைஅகலமான பாத்திரத்தில் மலைவாழை பழத்தை உரித்து நன்றாகப் பிசையவும். நாட்டுச்சர்க்கரை, விதை நீக்கிய பேரீச்சம்பழம், கற்கண்டு, தேன், ஏலக்காய்த்துாளை ஒவ்வொன்றாகச் சேர்த்துப் பிசையவும். கடைசியாக நெய் சேர்த்து கலக்கவும். எல்லாம் நன்றாகக் கலக்கப்பட்டதும் சுவை மிக்க பஞ்சாமிர்தம் தயாராகி விடும்.-பிரசாதம் தொடரும்ஆர்.வி.பதி