கடவுள் நம்பிக்கை
கோயிலில் தன் பிறந்த நாளன்று அன்னதானம் செய்ய உத்தரவு இட்டார் மன்னர். அதை வாங்குவதற்காக ஒரு ஏழையும் வரிசையில் நின்றார். அவரை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்தனர். இதனால் அவர், எல்லோரும் போன பிறகு அன்னதானத்தை வாங்கி கொள்ளலாம் என ஒதுங்கி நின்றார். கூட்டமும் குறைந்ததாக இல்லை. போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ என தன்னைத்தானே நொந்து கொண்டார். அன்னதானச் சாப்பாடும் சாப்பிடவில்லை அவர். அன்று மாலை கோயில் குளக்கரையில் சோர்வாக அமர்ந்திருந்தார். அங்கு தண்ணீரில் தெரிந்த கோபுர பிம்பத்தை பார்த்து 'இன்று பட்டினியாகத் தான் இருக்க வேண்டும் என்பது கடவுள் விருப்பம் போல' என புலம்பினார்.இன்று யாரும் பட்டினியாக இருக்க மாட்டார்கள் என நினைத்த மன்னர் எதேச்சையாக அவர் புலம்புவதை கேட்டார். இன்று இரவு என்னோடு உமக்கு விருந்து என சொல்லி அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்.பிறந்த நாள் விருந்துணவு சாப்பிட்ட பின்பு ஏழைக்கு நீ விரும்பிய தொழிலை நேர்மையாக செய்து வாழ்வதற்கு இந்த பையில் உள்ள பொற்காசுகள் உதவியாக இருக்கும் என்றார் மன்னர். அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏன் அழுகிறாய்?' என மன்னர் கேட்க, இது நாள் வரை பிறவி ஏழை என நினைத்தேன். ஆனால் பிறவி முட்டாள் என்பதை இன்று தான் புரிந்து கொண்டேன் என்றார். என்ன சொல்கிறீர்கள் என மீண்டும் கேட்க, இன்று கோயில் கோபுரத்தை பார்த்து ஏன் இப்படி படைத்தாய் எனக்கேட்டதற்கு தங்களோடு அமர்ந்து சாப்பிடும் வாய்ப்பையும் கொடுத்து வாழ்வதற்கு பொருளும் கொடுக்க வைத்துள்ளார். ஆனால் நேற்று வரை வணங்காமல் விட்டு விட்டேனே என்றார் புதிய பணக்காரர்.நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியை விட சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என நம்புங்கள். நல்லதே நடக்கும்.