உள்ளூர் செய்திகள்

எங்கள் குல தெய்வம்!

காஞ்சிப்பெரியவர் கிராமம் ஒன்றில் தங்கியிருந்தார். அவரைத் தரிசிக்க வந்த விவசாயி ஒருவர்,''சாமி! என் வாழ்க்கையே போராட்டமா இருக்கு! ஏன் உயிரோட இருக்கமோன்னு வெறுப்பா இருக்கு!'' என்று சொல்லி அழுதார்.பெரியவர் அவரிடம்,''குலதெய்வத்திற்கு ஒழுங்கா பூஜை செய்றியா?'' என்று கேட்டார்.'எங்க முன்னோருங்க பொழைப்பு தேடி, பர்மா போனவங்க! என் பாட்டனாருக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது. அதனால, பின்னால் வந்த வம்சத்தாருக்கு குலசாமியே தெரியாமப் போச்சு!'' என்றார் விவசாயி.'யாராவது உன் குடும்பத்து பெரியவங்க கிட்ட உன் குலதெய்வம் பத்தி கேட்டுட்டு வா'' என்றார் பெரியவர்.'என்ன சாமி... ஊர்ல எத்தனையோ சாமி இருக்க, குலசாமிகிட்ட அப்படி என்ன இருக்கு?'' என இழுத்தார் விவசாயி.'காரணமாத் தான் சொல்றேன். உடனே கிளம்பு! குலதெய்வம் யாருன்னு கண்டுபிடி! அதற்கு பூஜை முடிச்சுட்டு வா'' என்று அனுப்பி வைத்தார் பெரியவர்.பத்து நாளுக்குப் பின் விவசாயி ஆர்வத்துடன் பெரியவரை பார்க்க வந்தார். 'சாமி! எங்க அப்பா வழி பாட்டனார் ஒருத்தர் இன்னும் இருக்கார். அவர்கிட்டே எங்க குலசாமி பற்றி பேசி கண்டுபுடிச்சுட்டேன்! அதோட பேர் பேச்சாயி. நடுகல்லா இருக்கும் அந்த அம்மன் கோயிலைச் சுத்தம் செஞ்சு, பாலூத்தி அபிஷேகம் செஞ்சுட்டு வர்றேன்,'' என்றார். 'அந்தக் கோயில நல்லா பாத்துக்கோ. தினசரி தீபமேத்து. கஷ்டம் எல்லாம் ஓடிப் போயிடும். பூவும், பொட்டுமா பேச்சாயி அம்மன் ஜொலிச்சா, உன் குடும்பமே ஜொலிக்கும். அடுத்த வருஷம் இதே தேதியில் மடத்தில் வந்து பாரு,'' என்றார் பெரியவர். ஓராண்டுக்குப் பின், விவசாயி பெரியவரைத் தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார்.''சாமி! குலசாமிக்கு பூஜை பண்றதால நிம்மதியா இருக்கேன். என் நிம்மதிக்கு வழிகாட்டினது நீங்க தான்,'' என்று சொல்லி கும்பிட்டார். அப்போது பெரியவர் குலதெய்வ வழிபாடு பற்றி பேசினார்.'சங்கிலிக் கண்ணி போல அறுபடாம வந்தது தான் கோத்திரம்(வம்சம்). இதில் பிறந்த குழந்தைகளுக்கு முடி கொடுத்தல், காது குத்து எல்லாமே குலதெய்வத்துக்குத் தான். பாட்டன், முற்பாட்டன் என வழிவழியா காப்பாத்தின சாமி நம்மையும் காப்பாத்துங்கிற எண்ணம் உனக்கு வந்திருக்கே! அதுவே பெரிய அனுக்கிரஹம் தான்! நாத்திகனா இருக்கிறவன் கூட, நம்ம பாட்டன்மாரும், தாய் தகப்பனும் வணங்கின கோயில் என்கிற ரீதியிலே குலதெய்வம் கோயிலுக்கு வந்து விடுவான். அவர்கள் காலடி பட்ட இடத்தில் நாமும் நிற்பது பெரிய விஷயமுனு நினைப்பான். அப்போ பக்தி தானா வந்துடும். குலதெய்வம் கோயிலிலே போயி வழிபட்டா, எவ்வளவு பெரிய தோஷமும் இல்லாம போயிடும். ஆயிரம் தெய்வம் இருந்தாலும், குலதெய்வத்துக்கு ஈடாகாது,'' என்று சொல்லி ஆசியளித்தார். விவசாயி மட்டுமல்ல! அங்கே கூடியிருந்த எல்லா பக்தர்களுமே குல தெய்வ வழிபாட்டின் சிறப்பை அறிந்து பரவசமடைந்தனர்.