உள்ளூர் செய்திகள்

காசியினும் மேலான பழநிமலை

ஹிந்துக்களின் புனித தலமாக திகழும் காசியை விடவும், மேலான தலம் பழநி என்கிறார் முருக பக்தரான அருணகிரிநாதர். 'விதமிசைந்தினி' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலில் 'காசியின் மீறிய பழனியங்கிரி' என்ற வரி இடம் பெற்றுள்ளது. பழநியில் வாழ்ந்த ஈசான சிவாச்சாரியார் என்னும் துறவி காசியில் தங்கியிருக்க முடிவு செய்தார். காசிக்கு புறப்படும் முன்பாக, பழநி மலைக்கோயிலுக்கு சென்றார். அங்கு ஓதுவார், “காசியின் மீறிய பழனியங்கிரி” என்று திருப்புகழை பாடினார். இதைக் கேட்டதும் இவருக்கு மனதில் மாற்றம் ஏற்பட்டது. “காசி, கங்கை நதியை விடச் சிறப்பானது பழநியும், சண்முக நதியும் என்றால், நான் ஏன் காசிக்குச் செல்ல வேண்டும்? வாழ்நாள் முழுதும் பழநியிலேயே தங்குவேன்” என முடிவெடுத்தார். அதன்படியே இருந்து வாழ்ந்து பழநி முருகனின் திருவடியிலேயே கலந்தார். மற்றொரு பாடலில் அருணகிரிநாதர், '' முருகா... உனது பழனி மலையெனும் ஊரைச் சேவித்து அறியேனே'' என மனதிலுள்ள வருத்தத்தை பதிவு செய்துள்ளார். பக்தர்கள் எந்த ஊருக்கு செல்லாவிட்டாலும் தவறில்லை. பழநிக்குச் செல்ல வேண்டும். பழநி தண்டாயுதபாணி சிலையைச் செய்தவர் போகர் என்னும் சித்தர். இந்த சிலை நவபாஷாணத்தால் ஆனது. இவரது தலை மொட்டை வடிவாக இருந்தாலும், பின் தலையில் குடுமி உள்ளது. பஞ்சாமிர்தம் கொண்டு செய்யும் அபிஷேகம் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது. இவர் கோவணம், பூணுால் மட்டும் அணியவில்லை. மார்பிற்கு இருபுறத்தில், 'சன்னவீரம்' என்னும் ஆபரணம், கைக்கு வளையல், பாதத்தில் சிலம்பு, சதங்கையை அணிந்திருக்கிறார். பழநி முருகன் மீது திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், பழனிப் பிள்ளைத்தமிழ், பழனாபுரி மாலை, பழனித் திருவாயிரம், பழனிப் பதிற்றுப்பத்தந்தாதி என பல பாடல்கள் உள்ளன. இதில் பழனாபுரி மாலையைப் பாடிய கவிஞர் மாம்பழக் கவிச்சிங்க நாவலர். பார்வை இல்லாத இவரிடம், “கண் பெற்ற எங்களாலேயே கந்தனைக் காண முடியவில்லை. நீ எவ்விதம் காண்பாய்?” என சிலர் கேட்டனர். கவிஞரும் முறையிட்டார். அவரது மனக்கண்களில் கருவறையில் நிகழும் அபிஷேகங்கள் அப்படியே தெரிந்தன. நாவலரும் அதைக் கண்டு பாடி துதித்தார். பக்தர்களும் இதை அறிந்து கவிஞரிடம் மன்னிப்பு கேட்டனர். இப்படி அதிசயம் நிகழ்த்திய பழநி முருகனின் கோயில் சேர மன்னர்களால் எழுப்பப்பட்டது. பாண்டியர்கள், கொங்குச் சோழர்கள், செட்டியார் சமூகத்தினர் எனப் பலரும் திருப்பணி செய்துள்ளனர். மகாலட்சுமி, காமதேனு, சூரியன், அக்கினி, பூமிதேவி ஆகியோர் வழிபட்ட திருவாவினன்குடி முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், சண்முக நதிக்கரையிலுள்ள பெருவாவுடையார் கோயில், வேணுகோபாலப் பெருமாள் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில்களும் இத்தலத்தை சுற்றி உள்ளன. பெருமை மிக்க பழநியில் 2023 ஜன.27ல் கும்பாபிஷேகம், பிப்.5 ல் தைப்பூச விழாவும் நடக்கின்றன. இதில் அனைவரும் பங்கேற்று முருகனின் அருள் பெறுவோம்.பிரசன்னா பழநியப்பன்