உள்ளூர் செய்திகள்

தெரி்ந்த பாரதம் தெரியாத பாத்திரம்-2 (17)

தன் கால்களைச் சரியாக கழுவாத நளனைக் கலிபுருஷன் கவ்விப் பிடித்தான். இந்த வேளையில் கால்களைக் கழுவுவது என்பது முக்கியமான ஒன்றா? இதற்கும் கலிபுருஷனுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேள்வி எழலாம்.புராண நூல்களில் சமஸ்காரம் என்ற பெயரில் கடமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதில் பிராமணன், அரசன், வைசியன் ஆகியோருக்கான கடமை என பிரிவுகள் உண்டு. நீராடுவது, பெரியவர்களை வணங்குவது, வீட்டில் விளக்கேற்றுவது, வாசலில் கோலமிடுவது, நெற்றியில் திலகமிடுவது என விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதில் வீட்டைவிட்டு வெளியே சென்று திரும்பும் போது கால்களைச் சுத்தமாகக் கழுவிக் கொள்வது என்பதும் ஒன்று. இதனால், அசுத்தம் நீங்கி சுத்தமாகிறோம் என்பது விஞ்ஞானப் பார்வை. இதைக் கடந்து கண்களுக்குப் புலனாகாத நிலையிலுள்ள சக்திகள் நடந்து வரும் சமயம் எளிதாகக் காலைத் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு மிகுதி. சரியாக கழுவாத நிலையில், தொற்றிய சக்தி தென்னை மரத்தில் ஏறுபவன் போல விறுவிறுவென நம்முள் ஏறி விடும்.சரியாக கழுவாத நிலைப்பாடு என்பது மேலோட்டமாகப் பார்த்தால், கவனக்குறைவு என்று சாதாரணமாகத் தெரியும். தீய காலம் என்பது இந்தக் கவனக்குறைவு மூலமாகவே செயல்படத் தொடங்கும். முதலில் இது மனதை ஆக்கிரமிக்கும். இதனால் விழிப்புணர்வு குறையும். அக்கறையின்மை உண்டாகும். செயல்பாடுகளில் அரைகுறை தன்மையைத் தோற்றுவிக்கும். இப்படிப்பட்டவர்களை, மாயை நிறைந்த கலிபுருஷன் ஆக்கிரமித்துக் கொள்வான். இந்த உலகில், அமிர்தம் மட்டுமில்லை விஷமும் உள்ளது. பூக்களோடு முட்களும் இருக்கவே செய்கின்றன. எப்படி இரவும், பகலுமாக காலகதி நடக்கிறதோ அப்படித்தான் எல்லாமே.....நன்மை செய்யும் தேவர்களைப் போலவே, அதற்கு எதிரான செயல்பாடுகள் கொண்டவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் கலிபுருஷன். இவன் எப்படிப்பட்டவன் என்று குறிப்புகள் உள்ளன. இவன் மனிதர்கள் செய்யும் பாவத்தையே உடம்பாக உடையவன். கோரமான முகமும், பற்களும் அருவருப்பைத் தரும். துவாபர யுகத்தின் முடிவில் பிறந்த இந்த கலிபுருஷனால் வழி நடத்தப்படுவதே கலியுகம். இவனது படைப்புகளே பாவம், அதர்மம், பொய், ஜம்பம், இம்சை, கருமித்தனம் ஆகியவை. இந்த தீய குணங்களில் ஒன்று நம்மிடம் இருந்தாலும், கலி நம்மை ஆட்டி வைப்பான்.குடி, கூத்து, சூதாட்டம், புணர்ச்சி இவையே இவனுக்கு விருப்பமானவை. ஆசையும், கோபமும் இவனது பிள்ளைகள். இவனால் உருவாக்கப்பட்டதே நரகம். இவனது மனைவி யாதனை. இவளோடு கூடி பெற்ற பிள்ளைகளால் தொடங்கப்பட்டதே கலியுகம்.சஞ்சல புத்தி, ஆசாரமின்மை, பெண்கள் மேல் ஆசை, தற்பெருமை, சுயநலத்துடன் பெற்றோரைப் புறக்கணித்தல், தீயவர் நட்பு என கலிபுருஷனால் உலகில் பரவிய தீமைகள் ஏராளம். கலியின் முதல் பாதத்தில், 16வயதுக்குள் பிள்ளை பெறுதல், குலமாதர் குணம் திரிதல், ஆண்கள் மதுவுக்கு அடிமையாதல் போன்றவை நிகழும். கலியின் இரண்டாம் பாதத்தில் சிறுதெய்வ வழிபாடு, அந்தணர்கள் வியாபாரியாக மாறுதல், தாய்மொழிப்பற்று குறைதல், அன்னிய மோகம் ஏற்படும். மூன்றாம் பாதத்தில் ஜாதிகள் அழிதல், சிவ, விஷ்ணு மறைந்து எல்லோரும் ஒன்றாதல், கொடிய நோய்களால் மரணம் ஏற்படுதல், தங்கம் போல தண்ணீர் விலை ஏறுவது போன்றவை உருவாகும்.இப்படி கலிபுருஷன் ஆட்சி பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்த கலிபுருஷனே, கால் கழுவாத ஒரு மந்தமான தருணத்தில் நளனை ஆக்கிரமித்தான்.அந்த நொடியே நளனிடம் பெரிய மனமாற்றம் ஏற்பட்டது. உருவத்திலும் கருப்பு நிறம் படரத் தொடங்கியது. முதன் முதலாக நளனுக்குள் சூதாடும் எண்ணம் ஏற்பட்டது(ஏற்படுத்தப்பட்டது).அதற்கேற்ப புஷ்கரன் என்பவனுடன் நளன் சூதாடினான். நாடு, நகரம், மாடு, மனை, பொன், பொருள் எல்லாம் இழந்தான்.மகன், மகள் இருவரையும் தேர்ப்பாகனான வார்ஷணேயனிடம் ஒப்படைத்து, தமயந்தியின் தந்தையிடம் அனுப்பினான்.எல்லாம் இழந்தபின், புஷ்கரன் சூதாட்டத்தில் வைக்க தமயந்தி இருப்பதை சுட்டிக் காட்ட, நளன் அதை ஏற்கவில்லை. 'இனி ஒரு வினாடியும் இங்கு இருக்க மாட்டேன்' என்று சொல்லி உடுத்திய ஆடையோடு நாட்டை விட்டு வெளியேறினான்.கணவனோடு வாழ்பவளே உத்தமி என்ற தமயந்தியும் அவனைத் தொடர்ந்தாள். நளனைக் கண்ட மக்கள் வருந்தினர். மூன்று நாட்களாக நடந்த நளனும், தமயந்தியும் களைத்துப் போய் ஓரிடத்தில் அமர்ந்தனர்.மனைவியைப் பார்க்க சக்தியற்ற நளன் தலை கவிழ்ந்தான்.ஆனாலும் தமயந்தி,''பிரபு.... துன்பத்திற்காக வருந்தாதீர்கள். எதுவும் நிரந்தரமற்ற இந்த வாழ்வில் அடுத்து என்ன செய்யலாம் என யோசியுங்கள்,'' என்றாள்.நெகிழ்ச்சியுடன் நளன்,''அன்பே! ஆபரணம் ஏதும் இல்லாமல் இருக்கும் உன்னைக் கண்டால் மனம் வருந்துகிறது. உன்னிடம் மன்னிப்பு கேட்கும் அருகதை கூட எனக்கில்லை,'' என்றான்.அப்போது அவர்களுக்கு மேல் மரக்கிளையில் ஐந்தாறு பறவைகள் அமர்ந்தன. அவற்றின் சிறகுகள் தங்கம் போல மின்னின. அவைகளைப் பிடிக்கும் என்ற ஆசை நளனுக்கு வந்தது.பாவம் நளன்...!இன்னும் மோசமான நிலைக்கு ஆளாக இருப்பதை அறியாமல் இருந்தான். - தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்