சக்தியில்லையென்றால் எதுவும் இயங்காது. உலகில் முதன்முதலில் தோன்றியவள் அன்னை ஆதிசக்தி. அவளிடம் இருந்தே, படைத்தல், காத்தல், அழித்தல் பணிகளைப் பிரம்மா, விஷ்ணு, சிவன் வடிவில் இருந்து செய்கிறாள் என அம்பாள் உபாசகர்கள் கூறுகின்றனர். உலகமெங்கும் வியாபித்துள்ள சக்தியை வணங்குவதற்கு உருவம் வேண்டுமென மும்மூர்த்திகளும் கேட்டனர். ஆதிபராசக்தியே முன்வந்து, தன் அம்சமாக ஸ்ரீசக்ரத்தையும், அதன் வடிவமான மகாமேருவையும் (மலை) வழங்கினாள். ஆதிபராசக்தியின் அம்சமான ஸ்ரீசக்ரத்தை கோயில்களில் பிரதிஷ்டை செய்வது வழக்கம். அதற்கு உருவம் கொடுக்கும் போது, மஹாமேருவாக உருவெடுக்கிறது. அம்மனின் காலடியில் சிறிய அளவில் பஞ்சலோகத்தில் மகாமேரு இருக்கும். ஆனால், மகாமேரு வடிவத்திலேயே ஒரு கோயில், சேலம் மாவட்டம், ஏற்காடு அருகேயுள்ள நாகலூரில் அமைந்துள்ளது. அமைதியான சூழலில், தென்றல் வீசும் ஆரோக்கியமான இடத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் சென்று வந்தால் மனஅமைதி கிடைக்கும்.
கோயில் அமைப்பு:
கிரானைட் கற்களால், 42 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட மஹாமேருவின் உள்ளே, மூலவராக லலிதா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கிறாள். கோபுரத்தின் மூன்று திசைகளிலும், ஆகம விதிப்படி சப்தமாதர்களில் மூவரான பிராஹ்மி, வைஷ்ணவி, கவுமாரி ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். பிரகாரத்தில் தேக்கு மரத்தினால், கலைநயத்துடன் மயில்மீது அருள்பாலிக்கும் சரஸ்வதிதேவி, விஸ்வரூப விஷ்ணு, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆகியோரின் ஆள் உயர சிலைகள் பிரமிக்க வைக்கிறது. ஈசான்ய மூலையில் தட்சணாமூர்த்தி சந்நிதி அமைந்துள்ளது.
பூஜைகள்:
ஆகம விதிப்படி தினமும் நான்கு கால பூஜை நடக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில், அம்பாளுக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள ஸ்ரீ சக்ரத்தில் எல்லா தெய்வங்களும் அடங்கியுள்ளன. அதில் உள்ள, ஒன்பது ஆவரணங்களை உருவப்படுத்தும் போது, மகாமேருவாக காட்சியளிக்கிறது. மகாமேருவை சரியான திசையில், சரியான முறையில் பிரதிஷ்டை செய்யும் போது, அந்த இடத்தில் பிரபஞ்சத்தின் (உலக) சக்தி குவியும். தியானம் பழகாதவர்கள் கூட அதன் மூலம் கிடைக்கும் அமைதியை இங்கு உணர முடியும்.
திறக்கும் நேரம்:
காலை 6- பகல் 1, மாலை 4- இரவு 7.30.
இருப்பிடம்:
சேலத்தில் இருந்து ஏற்காடு 28 கி.மீ.,தூரம். அங்கிருந்து 7 கி.மீ.,தூரத்தில் நாகலூர். ஏற்காட்டில் இருந்து நாகலூருக்கு அரைமணி நேரத்துக்கு ஒரு பஸ் செல்கிறது.
போன்:
04281 291 241.