உள்ளூர் செய்திகள்

அதிசயம் காண்போமா! கையடக்க சிறிய லிங்கம்

தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பெரிய லிங்கங்களை தரிசித்திருக்கும் நீங்கள், கையளவே உடைய சிறிய லிங்கத்தை பார்த்திருக்கிறீர்களா? உடும்பு வால் போல் தோற்றம் அளிக்கும் இந்த லிங்கத்தைத் தரிசிக்க, காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமாகறல், மாகறலீஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.தல வரலாறு: முன்னொரு காலத்தில் பிரம்மா இவ்வூர் வந்து சிவபூஜை செய்து விட்டு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப் பலாமரம் ஒன்றை நட்டார். அந்த மரம் தினமும் ஒரு பழம் கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்தார் அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் சுமையாக, அந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டார். நடராஜருக்கு அந்தப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து, மன்னருக்கு கொடுப்பது வழக்கமாயிற்று.ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. 'மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன், இதற்கென வேலைக்காரர்களை நியமித்திருக்கலாமே' என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம், “நான் சிறுவன் என்பதால் பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லாரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன்,” என்று கூற, அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால், நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன், அந்த மரத்தை எரித்து விட்டான்.ஊர் திரும்பிய மக்களிடம் பலா மரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பி விட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன்,“பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன்,” என்றான்.அதற்கு மன்னன், “வேலைக்காரர்கள் வேண்டும் என நீ என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், மரத்தையே எரித்ததால் உனது கண்களை கட்டி, நாடு கடத்த உத்தரவிடுகிறேன்.” என்றான்.காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது, மன்னனும் உடன் சென்றான். ஊர் எல்லையில் அவனை விட்டு விட்டு திரும்பிய போது, ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. வால் மட்டும் வெளியே தெரிந்தது.காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் கலைத்த போது, உடும்பின் வாலில் பட்டு ரத்தம் பீறிட்டது. அப்போது அசரீரி தோன்றி, சிறுவனை நாடு கடத்த இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தது. அத்துடன் சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும், அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டும்படியும் ஆணையிட்டது. மன்னனும் அதன்படியே செய்தான். உடும்பின் வால் அளவிலான லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.தல சிறப்பு: திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையைக் கொடுத்தான். புது மணத்தம்பதிகளை வெள்ளை யானையில் அமரச்செய்து கண்ணாறக் கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப, முருகன் இத்தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து காட்சி தந்தார். இங்குள்ள அம்பிகை திரிபுவன நாயகியை வழிபட்டால் உலகையே சுற்றி வந்ததாக ஐதீகம். திரிபுவனம் என்றால் பூலோகம், மேலோகம், பாதாளம். இங்கு தரப்படும் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் ரத்தம், எலும்பு, பார்வைக் குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பர். பிரிந்த தம்பதி ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் பூஜை செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.பெயர்க்காரணம்: முருகப்பெருமான், அரக்கர்களை அழிக்க போர் செய்த போது, தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்தான். அவன் இத்தலம் வந்த போது சிவனுக்கு தன் பெயரால் மாக்கிரகன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி 'மாகறலீசர்' என்று மாறியது.கோவில் அமைப்பு: அழகிய சுதை சிற்பங்களோடு ஐந்து நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் உள்ளது. பிரகாரத்தில் கணபதி, ஆறுமுகன், அறுபத்து மூவர், நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னதி உள்ளது. விமானத்தில் ைகயில் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியைக் காணலாம்.எப்படி செல்வது: காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் சாலையில் 16 கி.மீ.,நேரம்: காலை 7:00- 12:00 மணி; மாலை 6:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94435 96619.