உள்ளூர் செய்திகள்

விபத்தின்றி வாகனம் ஓட்ட டிரைவர்களுக்கு ஒரு கோவில்

விபத்தின்றி வாகனம் ஓட்ட நினைக்கும் டிரைவர்கள், தீயணைப்பு உள்ளிட்ட ஆபத்தான பணி செய்பவர்கள் திருச்சி அருகிலுள்ள திருநாராயணபுரம் வேத நாராயணப் பெருமாள் கோவிலிலுள்ள பிள்ளைத்திருநறையூர் அரையரை தரிசித்து வரலாம். தல வரலாறு: பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவர் கேட்டபடி செய்த பெருமாள், இத்தலத்தில் பள்ளி கொண்ட நிலையில் சிலையானார். வழிபாடு இல்லாமல் சிலை மண்ணுக்குள் புதைந்தது. ஒரு முறை இங்கு தங்கினார் மன்னர் வானவராயர். அவர் கனவில் தோன்றிய சுவாமி, தான் புதைந்துள்ள இடம் பற்றி சொல்லி, சிலையை எடுத்து கோவில் கட்ட உத்தரவிட்டார். மன்னரும் அவ்வாறே செய்தார். வேதத்தை உபதேசித்ததால், சுவாமிக்கு 'வேதநாராயணர்' என பெயர் வந்தது.அரையருக்கு அருள்: பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் சுவாமியைத் தரிசிக்க வந்தார். அப்போது சுவாமி சன்னதிக்கு மேலே பனை ஓலை வேயப்பட்டிருந்தது. அப்போது, ஓலையில் தீப்பற்றும்படி மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார் பெருமாள். அதிர்ந்து போன பக்தர், சுவாமி மீது தீப்பிழம்பு விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளைச் சிலை மீது படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக விழுந்து, சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாதபடி தடுத்தார். தன் மீது இவ்வளவு பாசம் கொண்ட அரையருக்கு காட்சியளித்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிரகாரத்திலுள்ள ஆழ்வார் சன்னதியில் பிள்ளைத்திருநறையூர் அரையர் வீற்றிருக்கிறார். டிரைவர்கள் விபத்தின்றி வாகனம் ஓட்டவும், ஆபத்தான தொழில் செய்பவர்களும், இரவு நேரத்தில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும் பாதுகாப்பு வேண்டி இவரை வழிபடலாம். தோஷ நிவர்த்தி தலம்: வேதநாராயணர், புஜங்க (பாம்பின் மீது) சயனத்தில், தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்து, நாபியிலுள்ள பிரம்மாவிற்கு வேதத்தை உபதேசிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன் இருக்கிறார்.ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம். வேறு எங்கும் இதை காண முடியாது. ராகு, கேது, நாக தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இந்த பாம்புடன் காட்சியளிக்கும் பெருமாளை வழிபட தோஷம் நிவர்த்தியாகும். காவியுடை ராமானுஜர்: ராமானுஜர் இங்கு வந்த போது, சுவாமி அவரிடம், 'காவிரியில் நீராடி காவி உடுத்தி வா!' என்றார். ராமானுஜரும் அவ்வாறே வந்தார். சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர் காவியுடை அணிந்து எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். மற்ற நாட்களில் இவருக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கப்படும்.நட்சத்திர தீபம்: பிரம்மா உபதேசம் பெற்ற தலம் என்பதால், இது கல்விக்குரியதாக திகழ்கிறது. வேத நாராயணருக்கு திருவோணம், ஏகாதசி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. ஜாதகத்தில் குரு பலமின்றி இருந்தால், திருமணம் தள்ளிப் போகும். இந்த தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், வேதநாராயணருக்கு துளசி மாலை அணிவித்து, சன்னதியில் 27 நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அல்லது தோஷம் உள்ளவரின் பிறந்த நட்சத்திரத்தன்று செய்வது சிறப்பு. இதை நட்சத்திர தீபம் என்கின்றனர்.சத்திய ஆஞ்சநேயர்: ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பிள்ளை லோகாச்சாரியார், மணவாளமாமுனிகள் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். கோவில் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி அனுமன் இருக்கிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். பொய் சொன்னாலோ, ஏமாற்றினாலோ, இவர் முன் சத்தியம் செய்து தரும்படி கேட்கும் வழக்கம் உள்ளது.எப்படி செல்வது: திருச்சியில் இருந்து 52 கி.மீ., தூரத்தில் தொட்டியம். அங்கிருந்து 5 கி.மீ., தூரத்தில் திருநாராயணபுரம். நேரம்: காலை 7:00- 12:00 மணி, மாலை 4:00 -8:00 மணி.அலைபேசி 99766 11898.