உள்ளூர் செய்திகள்

மாயம்... மாயம்

கேரள மாநிலம் ஆலப்புழா திருப்புலியூரில் மகாவிஷ்ணுவின் திவ்ய தேசமான மாயப்பிரான் கோயில் உள்ளது. பாண்டவர்களில் பீமன் தவமிருந்து அருள் பெற்றதால் 'பீம ஷேத்ரம்' எனப்படுகிறது. இங்கு வருவோரின் வாழ்வில் மாயம் நிகழும்.சிபிச்சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி இப்பகுதியை ஆட்சி செய்தார். அவருக்கு நோயும், நாட்டிற்கு பஞ்சமும் வந்தது. அச்சமயம் இங்கு வந்த சப்தரிஷிகளிடம், எங்கள் பிரச்னையை தீர்த்தால் தானம் தருவதாக மன்னர் சொன்னார். இதைக் கேட்ட அவர்கள் கோபத்துடன், ''முன்வினையால் கஷ்டப்படும் உன்னிடம் தானம் வாங்கினால் எங்களுக்கு பாவம் வரும்'' என்றனர். ஆனாலும் தங்கம், பழங்களை அனுப்பி சமாதானம் செய்ய முயன்றார். அதையும் ஏற்காததால் கோபம் அடைந்தார் மன்னர். உடனே அவர்களுக்கு எதிராக யாகம் ஒன்றை நடத்தினார். அதில் தோன்றிய தேவதையிடம், அந்த சப்தரிஷிகளை கொல்ல ஆணையிட்டார். இதையறிந்த அவர்கள் மகாவிஷ்ணுவைச் சரணடைந்தனர். உடனே அவர் இந்திரனை புலியாக மாற்றி தேவதையை அழித்தார். இதனால் ஊருக்கு 'திருப்புலியூர்' என்றும், மாயம் செய்து ரிஷிகளை காத்த மகாவிஷ்ணுவுக்கு 'மாயப்பிரான்' என்றும் பெயர் வந்தது. புருஷசூக்த விமானத்தின் அடியிலுள்ள வட்டமான கருவறையில் மாயப்பிரான் நின்ற கோலத்தில் இருக்கிறார். தாயார் பொற்கொடி நாச்சியார் தனி சன்னதியில் இருக்கிறாள். இங்கு பீமனின் பெரிய கதாயுதம் உள்ளது. அன்றி மற்றோர் உபாயமென் இவளந்தண் துழாய் கமழ்தல்குன்ற மாமணி மாட மாளிகைக் கோலக் குழாங்கல் மல்கிதென் திசைத் திலதம் புரை குட்டநாட்டுத் திருப்புலியூர்நின்ற மாயப்பிரான் திருவருளம் இவள் நேர்பட்டதேஎன நம்மாழ்வார் பாடியுள்ளார். எப்படி செல்வது: ஆலப்புழாவில் இருந்து திருவல்லம் சாலையில் 48 கி.மீ., விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி.நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94478 00291அருகிலுள்ள கோயில்: ஆலப்புழா இமயவரப்பன் 5 கி.மீ., (ஆத்ம பலம் பெற...)நேரம்: அதிகாலை 5:00 - 10:00 மணி; மாலை 5:00 - 7:30 மணிதொடர்புக்கு: 0479 - 246 6828