கடன் பிரச்னை தீர்க்கும் ஆதிநரசிம்மர்
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள திருக்குறையலுாரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். சுவாதி நட்சத்திரத்தன்று இவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும். பார்வதியின் தந்தையான தட்சன், தான் நடத்திய யாகத்திற்கு மருமகனான சிவனை அழைக்கவில்லை. கோபம் கொண்ட பார்வதி நியாயம் கேட்டு புறப்பட்டாள். மகளையும் தட்சன் அவமதிக்கவே, அவள் யாகத்தீயில் விழுந்து உயிர் நீத்தாள். கோபம் அடைந்த சிவன் தன் அம்சமான வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி வைத்தார். யாகத்தை அழித்த அவர், அதில் பங்கேற்ற தேவர்களைத் தண்டித்தார். பார்வதியைப் பிரிந்த சிவபெருமான் மனம் வாடினார். அவரது மனக்குறை போக்கும் விதமாக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நரசிம்மர் காட்சியளித்து அமைதிப்படுத்தினார். இத்தலத்தில் மூலவராக அவரே கோயில் கொண்டிருக்கிறார். இங்கு வழிபட்டால் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும். திருமங்கையாழ்வாரின் அவதார தலமான இங்கு தை அமாவாசையை ஒட்டி இத்தலத்திற்கு அருகிலுள்ள திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும். அப்போது திருநாங்கூரில் இருந்து திருமங்கையாழ்வார் இக்கோயிலுக்கு எழுந்தருள 'திருப்பால்லாண்டு தொடக்கம்' என்னும் தமிழ் மறை பாடி வழிபடும் வைபவம் நடக்கும். பழமையான இத்தலம் 'ஆதிநரசிம்மர் தலம்' என்றும், தென்னிந்தியாவின் சிறந்த நரசிம்ம ேக்ஷத்திரம் என்பதால் 'தட்சிண நரசிம்மர் தலம்' என்றும் அழைக்கப்படுகிறது. மூலவருக்கு பிரதோஷத்தன்று விசேஷ பூஜை நடக்கும். மனநல பாதிப்பு, கடன் தொல்லை, குடும்ப பிரச்னை தீர சுவாதி நட்சத்திரத்தன்று நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்கின்றனர். அமிர்தவல்லித்தாயார், சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி உள்ளது. அமாவாசையன்று இங்கு நடக்கும் சுதர்சன ஹோமத்தில் பங்கேற்றால் கிரக, பித்ரு தோஷம் நீங்கும்.செல்வது எப்படி: சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 10 கி.மீ., துாரத்தில் மங்கைமடம்., அங்கிருந்து 2 கி.மீ.,விசேஷ நாட்கள்: நரசிம்ம ஜெயந்தி, தை அமாவாசை, திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்நேரம்: காலை 8:00 - 11:00 மணி; மாலை 4:00 - 7:00 மணிதொடர்புக்கு: 94435 64650, 94430 07412 அருகிலுள்ள தலம்: சீர்காழி உலகளந்த பெருமாள் கோயில்(12கி.மீ.,)