ஆக.29 ஓணம் பண்டிகைமகாபலியின் ஆணவத்தை அழிக்க விஷ்ணு திரிவிக்ரமனாக எழுந்தருளினார். அதே கோலத்தில் உலகளந்த பெருமாள் என்னும் திருநாமத்துடன் காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கிறார். கச்சிஊரகம் எனப்படும் இக்கோயிலுக்குள் நான்கு திவ்யதேசங்கள் உள்ளன. இவரை வணங்கினால் வாழ்வில் எல்லா உயர்வையும் அருளுவார்.
தலவரலாறு:
மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய அஸ்வமேதயாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். பலியும் சம்மதித்தான். அப்போது அவர் திருவிக்ரம மூர்த்தியாக உயர்ந்து, ஓரடியால் மண்ணையும், மற்றொரு அடியால் விண்ணையும் அளந்துவிட்டு மூன்றாவது அடியை பலியின் சிரசில் வைத்தார். அவன் பாதாளலோகத்தைச் சென்றடைந்தான். தானம் வாங்க வந்த பெருமாளின் விஸ்வரூப தரிசனத்தைத் காணமுடியாமல் போய்விட்டதே என எண்ணி வருந்தினான். அங்கேயே தவத்தில் ஆழ்ந்தான். அவனுடைய தவத்திற்கு இணங்கி சத்தியவிரத ÷க்ஷத்திரம் என்னும் காஞ்சியில், உலகளந்த பெருமாளாக உயர்ந்து நின்று காட்சியளித்தார். அத்தலமே ஊரகம் உலகளந்தபெருமாள் கோயிலாகும்.
உலகளந்த பெருமாள்:
கருவறையில் மேற்குநோக்கிய திருமுகத்துடன் உலகளந்தபெருமாள் அருள்பாலிக்கிறார். இடக்கரத்தில் இருவிரல்களையும், வலக்கரத்தில் ஒருவிரலையும் உயர்த்திக் காட்டி நிற்கிறார். இரண்டடியால் மண்ணையும், விண்ணையும் அளந்தபின் 'மூன்றாவது அடி எங்கே?' என்று கேட்கும் விதத்தில் வீற்றிருக்கிறார். இவருக்கு திருவிக்ரமன் என்ற பெயரும் உண்டு. தாயாருக்கு அமுதவல்லிநாச்சியார் என்பது திருநாமம்.
நான்கு திவ்யதேசம்:
தொண்டைமண்டலமான காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள 22 திவ்யதேசங்களில் இத்தலம் 'கச்சி ஊரகம்' என காஞ்சிபுரத்தோடு சேர்த்தே கூறப்படுகிறது. 'கச்சி' என்றால் 'காஞ்சிபுரம்'. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் ஒரே கோயிலுக்குள் இருக்கின்றன. திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தால், இந்த நான்கு கோயில் பெருமாள்களையும் பாடியுள்ளார். இந்த திவ்யதேசப் பெருமாள்கள் தொண்டைமண்டலத்தின் எப்பகுதியில் இருந்து இங்கு வந்து சேர்ந்தனர் என கண்டறிய முடியவில்லை. வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்த இத்தலங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் இங்கு வந்து சேர்ந்ததாகக் கூறுகின்றனர். நீரகத்தில் ஜெகதீசப்பெருமாளும், நிலமங்கைவல்லியும் அருள்பாலிக்கின்றனர். காரகத்தில் கருணாகரப்பெருமாளும், பத்மாமணி நாச்சியாரும் வீற்றிருக்கின்றனர். இவர் கார்ஹ மகரிஷியின் தவப்பயனாக காட்சி கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது. கார்வானத்தில் கமலவல்லி நாச்சியாரோடு கார்வானப்பெருமாள் காட்சி தருகிறார்.
பேரகம் உரகத்தான்:
சாதாரண மனிதனாக இருந்த மகாபலி உலகளந்த பெருமாளின் நெடிய கோலத்தை முழுமையாகக் காணமுடியாமல் பதை பதைத்து நின்றான். பெருமாளும் மனமிரங்கி, எளிமையாக ஆதிசேஷன் வடிவத்தில் காட்சிஅளித்தார். இந்த இடத்தை 'பேரகம்' என்பர். இங்கு பாம்பு வடிவில் பெருமாள் வீற்றிருக்கிறார். 'உரகத்தான்' என்பது அவரின் திருநாமம். 'உரகம்' என்றால் 'பாம்பு'. அப்பெயரே மருவி நாளடைவில் 'ஊரகத்தான்' ஆகி விட்டது என்றும் கூறுவர். இவருக்கு திருமஞ்சனம் செய்து திருக்கண்ணமுது என்னும் பாயாசம் படைத்து வழிபட்டால் புத்திரப்பேறு உண்டாகும்என்பது ஐதீகம்.
சங்குசக்கர ஆஞ்சநேயர்:
உலகளந்த பெருமாளுக்கு எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதி விசேஷமானது. சங்குசக்கரம் ஏந்திய நிலையில் நான்கு கரங்களுடன் இவர் அருள்பாலிக்கிறார். இருகைகள் பெருமாளை வணங்கிய நிலையில் அஞ்சலி ஹஸ்தமாக விளங்குகிறது. இவருக்கு மூலம் நட்சத்திரம், சனிக்கிழமைகளில் வழிபாடு நடக்கிறது. இவரை வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கி மனதில் தைரியம் அதிகரிக்கும்.
திருவிழா:
தை மாதம் பிரம்மோற்ஸவம், ஆவணி திருவோணம், வைகுண்டஏகாதசி, அனுமத்ஜெயந்தி.
திறக்கும்நேரம்:
காலை 6- பகல்12, மாலை4- இரவு8.
இருப்பிடம்:
காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்ட் அருகில்.சி.வெங்கேடஸ்வரன், சிவகங்கை