பைரவா... பைரவா...
முன்பு சிவன் கோயிலின் கதவை பூட்டியதும் வாசலில் உள்ள பைரவர் சன்னதியில் சாவியை வைப்பர். (இப்போது இப்படி செய்ய முடியுமா...) ஏன் தெரியுமா... இவரே சிவன் கோயிலின் காவல் தெய்வம். இவரை வழிபட்டால் வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும். எதிரிபயம் விலகும். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள தகட்டூரில் காவல் தெய்வமான பைரவரே மூலவர். இலங்கையில் ராவணனை வதம் செய்த ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதை போக்க சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக காசியில் இருந்து லிங்கம் கொண்டு வருமாறு அனுமனிடம் கூறினார். அதன்படி அங்கிருந்து சிவலிங்கத்தை கொண்டு வரும்போது, அவருடன் காசியின் காவலரான பைரவரும் வந்தார். வழியில் இத்தலம் பிடித்துப் போகவே, பைரவர் இங்கு தங்கினார். இதனால் காசி விஸ்வநாதர், விசாலாட்சி சன்னதிகளும் இங்கு உள்ளன. மூலஸ்தானத்தில் எந்திர பீடம் மீது நான்கடி உயரத்தில் இரண்டு கைகளுடன் பைரவர் காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமி, பைரவாஷ்டமியன்று யாகம் நடக்கும். பைரவரின் அபிஷேக தீர்த்தம் பருக மனபலம் அதிகரிக்கும். பிரச்னை தீரும். இவருக்கு அருகில் வெள்ளிப் பிரம்பு, திரிசூலம் ஏந்திய உற்ஸவர் பைரவர் இருக்கிறார். பைரவருக்கு நாய் வாகனம் ஏன் தெரியுமா... வாழ்வில் வரும் இன்ப, துன்பத்திலும் கடவுளை மறக்க கூடாது என்கிறது வேதம். இந்த வேதத்தின் வடிவம் நாய். அதற்கு 'வேத ஞாளி' என மற்றொரு பெயரும் உண்டு. கோயிலுக்கு எதிரிலுள்ள குளக்கரையில் காவல் தெய்வங்கள் உள்ளன. எப்படி செல்வது: நாகப்பட்டினத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை (என்.எச் - 32) வழியாக 55 கி.மீ., விசேஷ நாள்: கால பைரவாஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம்.நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04369 - 270 197, 270 662அருகிலுள்ள கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் 18 கி.மீ., (மோட்சம் பெற...)நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 99442 23644, 78717 80044