எதிரிபயம் விலக...
மத்தியபிரதேசம் தாதியா நகரில் உள்ளது பகலாமுகி கோயில். சக்தி பீடமான இதை 'பீதாம்பர பீடம்' என்கின்றனர். இங்குள்ள ஆஸ்ரமத்தில் தான் அம்மன் இருக்கிறாள். முன்பு இப்பகுதியில் புயல் ஒன்று உருவாக இருந்தது. இதை அறிந்த துறவிகள் அம்மனிடம் முறையிட்டனர். அதை ஏற்று ஆஸ்ரமத்திற்கு முன்புள்ள சரோவர் ஏரியில், அம்மன் எழுந்தருளி புயல் வராமல் தடுத்தாள். பின் ஒருநாள் மதன் என்ற அரக்கன் இப்பகுதி மக்களை துன்புறுத்தினான். உடனே அம்மன் அவனது நாக்கை பிடித்து இழுத்தாள். கதறிய அவன், ''தாயே... மன்னியுங்கள். உங்களின் பாதத்திற்கு கீழே நிரந்தரமாக இருந்து காவல் புரிகிறேன்'' எனக் கெஞ்சினான். மனம் இரங்கிய அம்மனும் 'பகலாமுகி' என்னும் பெயரில் இங்கு குடிகொண்டாள். பகலாமுகி என்றால் தங்கம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டவள் என பொருள். பகலாமுகியின் அருளால் ஈர்க்கப்பட்ட பிரம்யலீன் பூஜ்யபாத் என்ற துறவி கோயிலைக் கட்டினார். அம்மன் எழுந்த ஏரியின் நடுவில் தற்போது யந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களை வரவேற்கும் விதத்தில் முகப்பில் அலங்கார வளைவு உள்ளது. ராஜபுத்திர, மராட்டிய கட்டட பாணியில் அமைந்த இக்கோயிலில் அழகான சிற்பங்கள், சுவர் ஓவியங்கள் உள்ளன. கருவறையில் வெள்ளை பளிங்கால் ஆன பகலாமுகி அம்மனுக்கு நான்கு கைகள் உள்ளன. வலது கையில் உள்ள தடி அசுரனை அடித்த நிலையிலும், இடது கை அசுரனின் நாக்கை இழுத்த நிலையிலும் உள்ளது. உடம்பு முழுவதும் நகைகள் ஜொலிக்கிறது. அம்மனுக்கு உகந்த மஞ்சள் நிறத்தில் பூக்கள், ஆடைகள், இனிப்பு பண்டங்களை சமர்ப்பிக்கின்றனர். இதனால் எதிரி பயம் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அனுமன், பைரவர், பூஜ்ய நாத், துாமாவதி சன்னதிகள் உள்ளன. நுாலகம், தியான மண்டபம், தோட்டம் ஆஸ்ரமத்தில் உள்ளன. எப்படி செல்வது: ஜான்சியில் இருந்து 29 கி.மீ., விசேஷ நாள்: நவராத்திரி, குரு பூர்ணிமா, வசந்த பஞ்சமி.நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மதியம் 3:00 - 9:30 மணிதொடர்புக்கு: 78801 18871அருகிலுள்ள கோயில்: சோனிகர் சமண கோயில்கள் - மலை மீது 77 கோயில், அடிவாரத்தில் 26 கோயில். (முக்திக்கு...)நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மதியம் 3:00 - 9:00 மணிதொடர்புக்கு: 94257 26867