இளமையாக இருக்க...
இளமையாக இருக்க ஆசையா... சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அருகில் உள்ள இளமையாக்கினார் கோயிலுக்கு செல்லுங்கள். சிவபக்தரும், மண்பாண்டத் தொழிலாளியுமான திருநீலகண்டர், ரத்னாசலை தம்பதியினர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் பெண்ணாசையால் தாசியின் வீட்டுக்குச் சென்று நடுநிசியில் வீட்டுக்கு வந்தார். அதை பார்த்த அவரது மனைவி, 'இன்று முதல் என்னைத் தொடாதே. இது சிவன் மீது ஆணை' என்றாள். அவரும் மனைவியை தொடாமலும், தாசி வீட்டுக்கு செல்லாமலும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். சத்தியத்தை மீறாத திருநீலகண்டரின் பெருமையை உலகறியச் செய்ய எண்ணினார் சிவபெருமான். துறவி வடிவில் தோன்றி நீலகண்டரிடம் திருவோடு ஒன்றைக் கொடுத்தார் சிவபெருமான். 'காசிக்கு யாத்திரை செல்கிறேன். திரும்பி வரும் போது வாங்கிக் கொள்கிறேன். அதுவரை உங்களிடம் இருக்கட்டும்' என்றார் துறவியாக வந்த சிவன். பல மாதம் கழித்து திருவோட்டை வாங்க வந்தார் துறவி. ஆனால் திருவோட்டை காணவில்லை. 'என்னை மன்னியுங்கள்' என்றார் நீலகண்டர். அதை ஏற்காமல், 'சொல்வது உண்மை என்றால் உன் மனைவியின் கையைப் பிடித்தபடி குளத்தில் நீராடி, அந்தணர்களின் முன்னிலையில் சத்தியம் செய்' என்றார் துறவி. இதைக் கேட்ட நீலகண்டருக்கு படபடப்பு வந்தது. நிரூபிக்க வேண்டுமே! என்ன செய்வது... மூங்கில் குச்சியின் ஒரு முனையை தான் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் மூழ்கி எழுந்தார். 'திருவோடு தொலைந்து விட்டது' என இருவரும் சத்தியம் செய்தனர். உண்மையை அனைவரும் ஏற்றனர். அப்போது துறவியாக நின்றிருந்த சிவபெருமான் பார்வதியுடன் காட்சியளித்து இருவரையும் இளமையாக்கினார். இதனால் இப்பெயர் சுவாமிக்கு வந்தது.இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் இளமை தீர்த்தம். தை மாதம் விசாகத்தன்று திருநீலகண்டர் குருபூஜை நடக்கும். அப்போது துறவி வடிவில் சிவன் எழுந்தருளி திருவோடு கொடுத்தல், தீர்த்தக் கரையில் சத்தியம் செய்தல் நிகழ்ச்சிகள் நடக்கும். இக்கோயிலில் ரத்னாசலை, நீலகண்டர் சன்னதிகள் உள்ளன. வெள்ளி அன்று சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய தம்பதி ஒற்றுமை சிறக்கும்.எப்படி செல்வது: சிதம்பரம் நடராஜர் கோயில் மேலவீதியில் உள்ளது.விசேஷ நாள்: நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி.நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 94426 12650, 04144 - 220 500அருகிலுள்ள கோயில்: சிதம்பரம் அனந்தீஸ்வரர் (மகிழ்ச்சி பெருக...)நேரம்: காலை 6:00 - 11:30 மணி; மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 98653 44297