உள்ளூர் செய்திகள்

கல்வித்தெய்வம்

சுவாமி வேதாந்த தேசிகன் ஹயக்ரீவரை நேரில் தரிசித்த தலம் கடலுாருக்கு அருகிலுள்ள திருவஹீந்திரபுரம். இங்கு கல்வி தெய்வமான ஹயக்ரீவரின் முதல் கோயில் உள்ளது.அசுரர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். பூலோகத்திலுள்ள ஔஷதாசலத்தில் தங்கி வழிபாடு செய்யவும், தக்க சமயத்தில் உதவி செய்வதாகவும் அவர் வாக்களித்தார். அதன்படியே சக்கராயுதத்தை ஏவினார். அது அசுரர்களை விரட்டிச் சென்று அழித்தது. அதன் பின் மகாவிஷ்ணு இத்தலத்தில் குடிகொண்டார். தேவர்களின் தலைவன் என்னும் பொருளில் 'தேவநாதன்' என பெயர் ஏற்பட்டது. அதன் பின் ஆதிசேஷன் ஒரு நகரத்தை உருவாக்கினார். அதுவே அஹீந்திர(ஆதிசேஷ)புரம் எனப் பெயர் பெற்றது.பெருமாளுக்கு தாகம் ஏற்பட்ட போது, கருடனிடம் தண்ணீர் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் கேட்டார். அவர் தன் வாலால் தரையில் அடிக்க தீர்த்தம் பீறிட்டது. தெற்குப் பிரகாரத்தில் கிணறாக உள்ள இத்தீர்த்தம் சேஷ தீர்த்தம் எனப்படுகிறது. தற்போது பிரார்த்தனைக் கிணறான இதில் உப்பு, மிளகு, வெல்லமிட்டு பிரார்த்தனை செய்கின்றனர். சர்ப்ப தோஷம் அகல இங்குள்ள சர்ப்பத்தை வழிபடுகின்றனர். வேதாந்த தேசிகன் இங்கு 40 ஆண்டுகாலம் வாழ்ந்தார். அவரது இல்லம் தேசிகன் திருமாளிகை எனப்படுகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.தேவநாத சுவாமி கோயில் அருகில் பிரம்மாச்சலம் மலை உள்ளது. 73 படிகள் கொண்ட இந்த மலை மீது லட்சுமி ஹயக்ரீவர் கோயில் கொண்டிருக்கிறார். வேதாந்த தேசிகன் இம்மலை மீது தவம் புரிந்து ஹயக்ரீவர், கருடாழ்வாரின் தரிசனத்தை நேரில் பெற்றார். கல்வியில் சிறக்க ஹயக்ரீவருக்கு துளசி, கல்கண்டு, தேன் நைவேத்யம் செய்கின்றனர். எப்படி செல்வது : கடலுார் - பண்ருட்டி வழியில் 6 கி.மீ.,விசேஷ நாள் : சித்திரை பிரம்மோற்ஸவம், வைகாசியில் நம்மாழ்வார் சாற்றுமுறை, நரசிம்ம ஜெயந்தி, புரட்டாசியில் வேதாந்ததேசிகன் பிரம்மோற்ஸவம்.நேரம்: தேவநாதர் கோயில் காலை 6:00- - 12:00 மணி; மாலை 4:00- - 8:00 மணிஹயக்ரீவர் கோயில்: காலை 7:00 -- 11:30 மணி; மாலை 4:30- -- 7:30 மணிதொடர்புக்கு: 04142- - 287 515அருகிலுள்ள கோயில் : சிங்கிரிகுடி நரசிம்மர் 22 கி.மீ., (எதிரிபயம் விலக...)நேரம்: காலை 7:00- - 12:00 மணி;மாலை 4:30- - 9:00 மணிதொடர்புக்கு: 0413 - 261 8759