உள்ளூர் செய்திகள்

கீர்த்திமாயா மந்திர்

கோகுலத்தின் மகாராஜாவாக போற்றப்படும் கிருஷ்ணரின் மனதைக் கொள்ளை கொண்டவள் ராதா. வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி மகாலட்சுமியின் அவதாரமாக கருதப்படும் இவரை 'ராதா ராணி' என்பார்கள். இவளின் தாயான கீர்த்தி மாயாவின் கோயில் உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பர்சானா நகரில் உள்ளது. கீர்த்தி மந்திர் எனப்படும் இக்கோயிலை தரிசித்தால் புகழுடன் வாழலாம். கோபியர் பலரும் கிருஷ்ணரை விரும்பினாலும், அவரின் மனதில் முதலிடம் பிடித்தவள் ராதா மட்டுமே. நண்பர்களான கிருஷ்ணரின் தந்தை நந்தகோபரும், ராதாவின் தந்தையும் அடிக்கடி சந்திப்பது வழக்கம். இந்நிலையில்தான் கிருஷ்ணர், ராதாவுக்கும் காதல் மலர்ந்தது. கிருஷ்ணரின் காதலியான ராதா பிறந்த தலம் கோகுலத்திற்கு அருகிலுள்ள பர்சானா என்ற கிராமம். இங்குள்ள கீர்த்திமாயா கோயிலைக் கட்டியவர் துறவி கிருபால்ஜி மஹாராஜ். கருவறையில் தாயின் மடியில் குழந்தையாக சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் ராதா இருக்கிறாள். இடதுபுறத்தில் சீதாதேவியுடன் ராமரும், வலதுபுறத்தில் ராதையுடன் கிருஷ்ணரும் நின்ற கோலத்தில் உள்ளனர். சிவப்பு நிறக் கற்களால் உருவான ரங்கீலி என்னும் மஹால் கோயிலுக்கு அருகில் உள்ளது. ஒரே நேரத்தில் மூவாயிரம் பக்தர்கள் பஜனை நடத்தும் மண்டபம் இது. இங்கு அழகான ஆர்ச் வேலைப்பாடுகளும், பூவேலைப்பாடு மிக்க துாண்கள், சலவைக்கல் தரைத்தளம் காண்போரை கவர்ந்திழுக்கும். இரு புறத்திலும் ராதா, கிருஷ்ணர் சுதைச்சிற்பங்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. 2019ல் வசந்த பஞ்சமியன்று இக்கோயில் திறக்கப்பட்டது. தினமும் மதியம் 12:00 மணி, இரவு 7:30 மணிக்கு ஆரத்தி நடக்கும். இங்குள்ள தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் ராதாகிருஷ்ண லீலைகளை விளக்கும் பொம்மைச் சிற்பங்கள் உள்ளன. இரவில் மின்விளக்கு ஒளியில் கோயில் ஜொலிக்கிறது. எப்படி செல்வது: மதுராவில் இருந்து 53 கி.மீ.,விசேஷ நாள்: ராதாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி.நேரம்: காலை 8:30 - 12:00 மணி; மாலை 4:30 - 8:00 மணிதொடர்புக்கு: 88824 80000அருகிலுள்ள கோயில் : ராதாராணி 3 கி.மீ., (மகிழ்ச்சியாக வாழ...)நேரம்: அதிகாலை 5:00 - 2:00 மணி; மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 99992 94729