மனமே மாறு
நடந்ததை எண்ணி வருந்துவதும், நடக்க இருப்பதை பற்றி யோசிப்பதும் மனதின் இயல்பு. 'பேயாய் உழலும் சிறுமனமே' என மனதைப் பற்றி மகாகவி பாரதியார் சொல்கிறார். இந்த மனதை ஒருநிலைப்படுத்த காத்திருக்கிறார் ஆந்திர மாநிலம் நகரி கீளப்பட்டில் உள்ள சந்திர மவுலீஸ்வரர். அஷ்ட லட்சுமிகளால் பூஜிக்கப்பட்டவர் இவர். அகத்தியர் உள்ளிட்ட முனிவர்களும், தேவர்களும் இவரை தரிசித்து பலன் பெற்றுள்ளனர். பக்தர்களை வரவேற்கும் விதத்தில் கோயிலுக்குள் நுழைந்ததும் மனைவி லோபமுத்திராவுடன் அகத்திய முனிவர் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து கருவறையில் சந்திர மவுலீஸ்வரர் காட்சியளிக்கிறார். சுவாமியின் முன் கைகூப்பி நின்றாலே நம் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்த வழிகாட்டுவார். சுவாமி சன்னதியை அடுத்து உள்ள அம்மன் திரிபுரசுந்தரி தன்னை சரணடைந்தவர்களுக்கு மனநலம், தைரியம் தருகிறாள். வேப்ப மரம், வில்வம், அரசமரம் இக்கோயிலின் தல விருட்சம். கோயிலுக்கு அருகில் நாகதீர்த்தம், ஐஸ்வர்ய தீர்த்தம் உள்ளன. ராஜ கணபதி, ஆஞ்சநேயர், வள்ளி, தெய்வானையுடன் முருகன் சன்னதிகள் உள்ளன. காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இங்கு வழிபட்டுள்ளனர்.எப்படி செல்வது: திருத்தணியில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் நகரி. அங்கிருந்து 2 கி.மீ., விசேஷ நாள்: அமாவாசை, கார்த்திகை திங்கள், திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி.நேரம்: அதிகாலை 5:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 99590 86451, 63046 92951அருகிலுள்ள கோயில்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி 21 கி.மீ., (நிம்மதிக்கு...)நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணிதொடர்புக்கு: 044 - 2788 5303