உள்ளூர் செய்திகள்

நோய் தீர்க்கும் தேவி

மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் பிரதிஷ்டை செய்த 108 திவ்ய தேவி கோயில்களில் மூன்று கேரளாவில் உள்ளன. அவற்றில் ஒன்று கொல்லம் மாவட்டம் பண்டாரத்துருத்து என்ற இடத்திலுள்ள மூக்கூம்புழா கோயில். இங்குள்ள அம்மன் கொடுங்காளி, பத்ரகாளி எனப்பட்டாலும் மூலவர் சிவலிங்கம். 'அஷ்டகோண லிங்கம்' எனப்படும் எட்டு முகம் கொண்ட அபூர்வ சிவலிங்கத்தில் குடிகொண்டு அவரது தொடையில் அம்மன் இருக்கிறாள். தன்னை தரிசிக்க வருவோரை நோயின்றி வாழ வைக்கிறாள். மனிதனின் மூக்கு அளவு வரை தண்ணீர் மூழ்கி இருந்ததால் இத்தலம் 'மூக்கூம்புழா' எனப் பெயர் பெற்றது. அப்படி தண்ணீர் சூழ்ந்த இடத்தில் தான் பன்னிரெண்டாம் நுாற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. கடலுக்கு மிக அருகில் இருந்தும் 2004 ல் ஏற்பட்ட சுனாமியால் இக்கோயிலுக்கும், ஊருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதில் இருந்தே காளியின் கருணையை அறியலாம். மதுரையை எரித்த கண்ணகி ஆலப்பாடு என்ற இப்பகுதியில் தங்கி இருந்ததாகவும், பின்னர் கொடுங்கல்லுார் நோக்கி புறப்பட்டதாகவும், அவரோடு வந்தவர்கள் வழிவழியாய் இங்கு வாழ்ந்து கோயில் கட்டியதாகவும் கருதப்படுகிறது. இங்கு கண்ணகி, கோவலன் கதையை பாடலாக கூறும் 'தோற்றம் பாட்டு' பாடப்படுவதே இதற்கு சான்று.சிவலிங்கத்தில் குடியிருக்கும் தேவியான சிவசக்தி சொரூபிணிக்கு காரியசித்தி பூஜை செய்து சிறிய வெங்கல பானை நிறைய மஞ்சள் நிரப்பி 'மஞ்சள் பற' என்ற நேர்ச்சை செய்தால் நோய் தீரும். விரதம் இருந்து கையில் வாளும், சிலம்பும் வைத்துக் கொண்டு கோயிலை ஏழு முறை வலம் வந்தால் தோஷம் விலகும். திருமணம், குழந்தைப்பேறு என விருப்பம் அனைத்தும் நிறைவேறும். இக்கோயிலில் தை பரணி திருவிழா 2025 ஜன.27 - பிப்.5 வரை நடக்கிறது.எப்படி செல்வது: கொல்லம் அருகே கருநாகப்பள்ளியில் இருந்து 4 கி.மீ.,விசேஷ நாள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி தை பரணி திருவிழாவின் 9 ம் நாள் மீனுாட்டு நிகழ்வு.நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 0476 - 282 6342அருகிலுள்ள கோயில்: காட்டில் மேக்கதில் தேவி 3 கி.மீ., (நினைத்தது நிறைவேற)நேரம்: அதிகாலை 5:00- - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி