பல்லாண்டு வாழ்க
உத்தரப்பிரதேசம் முசாபர் மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலம் சுகஸ்தல். கங்கைநதிக் கரையில் அமைந்த இக்கோயிலுக்கு தமிழ் மாதப்பிறப்பன்று வருவது விசேஷம். இங்கு வருவோரின் சந்ததியினர் பல்லாண்டு வாழும் பாக்கியம் பெறுவர். வேத வியாசரின் மகனான சுகபிரம்ம மகரிஷியின் ஆஸ்ரமம் இருந்த இடம் இது. இதனால் சுக ஸ்தல் எனப் பெயர் பெற்றது. 5125 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தான் அர்ஜூனனின் பேரனான பரீட்சித்து மன்னருக்கு பகவான் கிருஷ்ணரின் பெருமைகளை சுகபிரம்ம மகரிஷி உபதேசம் செய்தார். அதைக் கேட்க இங்குள்ள ஆலமரத்தின் கீழ் 8000 மகரிஷிகள் அப்போது கூடினர். தற்போதும் இந்த ஆலமரத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். இதை தரிசிக்க வேண்டும் என மனதில் நினைத்தாலே அவர்களை வரவேற்க வைகுண்ட வாசல் திறக்கும் என்கின்றனர் வைணவ ஆச்சாரியர்கள். கலியுகத்தில் கடவுளின் கருணையைப் பெற எளிய வழி கடவுளின் புகழை இசையுடன் பாடுதல் (நாம சங்கீர்த்தனம்) ஆகும். இதற்கான மையமாக இக்கோயில் இருப்பதால் பாகவதர்கள் எப்போதும் பாடியபடி உள்ளனர். சுவாமி விவேகானந்தரைக் குருவாக ஏற்று வாழ்ந்தவர் கல்யாண் தேவ்ஜி. இவர் 1944ல் இத்தலத்தின் பெருமையை பறை சாற்றும் விதமாக ஸ்ரீசுக பிரம்மர், கிருஷ்ணர், அனுமன் கோயில்களை இங்கு உருவாக்கினார். அருகிலேயே பாகவத சப்தாஹ யக்ஞக் கோயிலை உருவாக்கினார். பாகவத உபன்யாசம் இங்கு நடக்கிறது. இதன் பின்னர் இக்கோயிலின் பெருமை நாடெங்கும் பரவியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசிக்கின்றனர். எப்படி செல்வது: ஹரித்வாரில் இருந்து 87 கி.மீ., விசேஷ நாள்: தமிழ் மாதப்பிறப்பு, கார்த்திகை பவுர்ணமி, கிருஷ்ண ஜெயந்தி.நேரம்: காலை 6:00 - 9:00 மணிதொடர்புக்கு: 79834 43652அருகிலுள்ள கோயில் : மோட்னா நாகராஜா 4 கி.மீ., (விஷபயம் தீர...) நேரம்: காலை 6:00 - 9:00 மணி