உள்ளூர் செய்திகள்

பணப்பிரச்னை தீர...

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றங்கரையில் திருநயினார் குறிச்சி கிராமத்தில் கறை கண்டேஸ்வரர் மகாதேவர் கோயில் உள்ளது. திருவள்ளுவர் வழிபட்ட இத்தலத்திற்கு வந்தால் பணப்பிரச்னை தீரும்.முன்பு தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது எழுந்த விஷத்தை குடித்தார் சிவன். இதை அறிந்ததும் விஷத்தை கழுத்திலேயே தங்கச் செய்தாள் பார்வதி. அதனால் கறை கண்டேஸ்வரர் என்றும், காலத்தின் எல்லையை கடந்தவர் என்னும் பொருளில் கரைகண்ட ஈஸ்வரர் என்றும் சுவாமிக்கு பெயர் ஏற்பட்டது. அம்மனின் பெயர் ஆனந்தவல்லி.சிவபக்தர்கள் திருப்பணிகளை முடித்து ராஜகோபுரம் எழுப்பி 2013ல் கும்பாபிஷேகத்திற்காக நல்ல நாள் குறித்தனர். அந்த நாளும், மன்னர்கள் காலத்தில் நடந்த கும்பாபிஷேக நாளும் ஒரே நாளாக இருப்பதை கல்வெட்டு மூலம் அறிந்த பக்தர்கள் சிவனின் திருவிளையாடல் இது என எண்ணி மகிழ்ந்தனர். தன்னை தேடி வருபவருக்கு எளியவரான இந்த சிவனை தெய்வப்புலவரான திருவள்ளுவர் வழிபட்டு இருக்கிறார். முகப்பு மண்டபத்தில் ராமாயணம், மகாபாரதம், சிவன் திருவிளையாடல்களை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. வலம்புரி விநாயகர், ஆல், அரசு, வேம்பு என மூன்று மரங்களுடன் கூடிய ஆதிசஷேன், தர்ம சாஸ்தா, நாகராஜா, கரமகரிஷி, காலபைரவர் சன்னதிகள் உள்ளன. விரும்பிய வரம் கிடைக்கவும், பணப்பிரச்னை தீரவும் திங்கள் அன்று வில்வ மாலை சாத்தி வழிபடுகின்றனர். எப்படி செல்வது: நாகர்கோவிலில் இருந்து வெள்ளிமலை 14 கி.மீ., அங்கிருந்து 3 கி.மீ., விசேஷ நாள்: சித்திரை விசு, கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி.நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94428 56231அருகிலுள்ள கோயில் : வெள்ளிமலை முருகன் 3 கி.மீ., (மகிழ்ச்சி நிலைக்க) நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:30 - 7:30 மணிதொடர்புக்கு: 04651 -- 250 706, 233 270