பிரம்மாண்ட கிருஷ்ணர்
காஞ்சிபுரம் திருப்பாடகம் பாண்டவதுாதப் பெருமாள் கோயிலில் கிருஷ்ணர் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். இத்தலம் ரோகிணி நட்சத்திரத்தினருக்கு உரியதாகும். கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக ஐந்து வீடுகளையாவது பெற்றுத் தரும் நோக்கத்துடன், துரியோதனனிடம் துாது சென்றார். துரியோதனன், பாண்டவர்களின் பெரிய பலமாக விளங்கும் கிருஷ்ணரை அவமானப்படுத்த நினைத்தான். துாது சென்ற அவர் அமர்வதற்காக இருந்த ஆசனத்தின் அடியில் அறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை மூடி மறைத்தான். கிருஷ்ணர் அமர்ந்ததும், திட்டப்படி ஆசனம் சரிந்து உள்ளே விழுந்தது. அவரைத் தாக்க அங்கு காத்திருந்த மல்லர்களைக் கொன்ற கிருஷ்ணர் விஸ்வரூப வடிவெடுத்தார். பின்னாளில் பாரதப்போர் முடிந்த பிறகு, மகாராஜா ஜனமேஜயர் இங்கு தவம் செய்து கிருஷ்ணரின் விஸ்வரூபத்தை தரிசித்தார். அவரே பாண்டவதுாதப் பெருமாளாக இங்கு அருள்புரிகிறார். பத்ர விமானத்தின் அடியில், மூலவர் கிருஷ்ணர் 25 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சத்தியபாமா, ருக்மணி இருவரும் உடனிருக்கின்றனர். இத்தலத்தின் புராணப் பெயர் திருப்பாடகம். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு தரிசிக்க நல்வாழ்வு உண்டாகும். கிருஷ்ணர் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வ பாதயோக சக்திகளை கொண்டு அருள்வதால், இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்வோருக்கு உடலின் 72,000 நாடி நரம்புகளும் பலம் பெறும். கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் துாதுவராக சென்றதால் பாண்டவ துாதப்பெருமாள் எனப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கும் பார்வை அளித்து தன் விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இங்கு காட்டியருளினார். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதியன்று தரிசிப்பது சிறப்பு. அருளாளப்பெருமாள், எம்பெருமானார், மணவாள மாமுனிகள் சன்னதி உள்ளன. நட்சத்திரங்களில் ஒருத்தியான ரோகிணி தேவி கிருஷ்ணரை பூஜித்து, சந்திரனை மணந்து கொள்ளும் பாக்கியம் பெற்றாள். தன் 27 நட்சத்திர தேவியரில் ரோகிணி, கார்த்திகை இருவரையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவியர்களை சந்திரன் மணந்தார். கிருஷ்ணருக்கு நன்றி செலுத்தும் விதத்தில் ரோகிணி, தினமும் சூட்சும வடிவில் வழிபடுவதாக ஐதீகம். ரோகிணியில் பிறந்தவர்கள் இங்கு வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம்.நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 4:00 - 7:30 மணிதொடர்புக்கு: 044- 2723 1899அருகிலுள்ள கோயில்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் 34 கி.மீ., (ராகு,கேது தோஷம் விலக...)நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 044 - 2716 2236