மோகினி அலங்காரத்தில் பெருமாள்
பெருமாளை நின்றகோலம், கிடந்தகோலம், அமர்ந்தகோலங்களில் தரிசித்திருப்போம். அவரை மோகினி அலங்காரத்தில் பார்க்க விரும்பினால், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலுள்ள பேளூர் சென்னகேசவர் கோயிலுக்கு வாருங்கள். விருகாசுரன் என்பவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் சாம்பலாகிவிடுவார் என்ற வரத்தை பெற்றான். இதனால் இவனுக்கு பஸ்மாசுரன் என்ற பெயரும் வந்தது. பஸ்மம் என்றால் சாம்பல். கண்ணில் கண்டவர்களை எல்லாம் சாம்பலாக்கிவிட எண்ணியதால் தேவலோகம் நடுங்கியது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் செய்வதறியாமல் மகாவிஷ்ணுவின் உதவியை நாடினர். பெண் பித்தனான அசுரனை அவன் வழியிலேயே சென்று சம்ஹாரம் செய்ய, மோகினியாக வடிவெடுத்து அவன் முன் சென்று நின்றார் மகாவிஷ்ணு. பின் அவனை தலையைத் நன்றாக தேய்த்து நீராடிவிட்டு வரும்படி கூறினார் மகாவிஷ்ணு. மோகினியின் அழகில் தன்னிலை மறந்திருந்த அவன், மறந்து தன் தலையில் கை வைத்ததும் சாம்பலாகி விட்டான். பெண்கள் மீது தவறான ஆசையை வளர்த்தால் அழிவு ஏற்படும் என்பதை உலகுக்கு உணர்த்தவே மகாவிஷ்ணு இந்த லீலையை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சி நடந்த இந்த இடத்திலேயே இவருக்கு கோயில் கட்டப்பட்டது. இப்படி உருவானதுதான் பேளூர் சென்னகேசவர் கோயில். மூலவராகிய சென்னகேசவர் இங்கு மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறார். நெற்றியில் செந்நிறத்தில் ஸ்ரீசூர்ணம் இட்டு, மூக்குத்தி அணிந்து நின்றகோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். முகத்தில் பெண்மையின் எழிலும் கண்களில் அருளும் இழையோடுகிறது. பாதத்தில் சதங்கையும், கொலுசும் அழகு செய்கின்றன. சங்கு, சக்கரம் இரண்டையும் மேல் இரு கைகள் தாங்கி நிற்கின்றன. வலக்கரத்தில் மகாலட்சுமி போல தாமரை மலரைத் தாங்குகிறார். இடக்கரம் கதாயுதத்தை தாங்கி நிற்கிறது. இவரது பாதத்தை தரிசிப்பதால் பாவ விமோசனமும், இக்கோயில் கோபுர கலசத்தைக் காண்பதால் சாபவிமோசனமும் உண்டாகும். வெள்ளிதோறும் சவுமியநாயகி தாயாரோடு பெருமாள் பவனி நடக்கிறது. மூலவரின் பின்புறத்தில் பெருமாள் பாதம் உள்ளது. தசாவதாரக் காட்சிகள், சிவனின் கஜசம்ஹாரக்கோலம், லட்சுமி நாராயணர், சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி, இரண்யவதம் செய்யும் உக்ரநரசிம்மர், யானை, குதிரை வீரர்கள், நடனமாதர்கள் என்று சன்னதியின் பக்கச்சுவர்கள் முழுவதும் சிற்பங்கள் இடைவிடாமல் ஏழு வரிசையில் அமைந்துள்ளன. மூலவரின் சன்னதி முன் இருக்கும் நவரங்க மண்டபத்தை 'அந்தராளம் சுதநாசி' என்கின்றனர். இங்கு நாட்டியப்பெண் தன் முடியைப் பின்னலிட்டு, ஆடை ஆபரணம் புனைவதும், கண்ணாடி பார்த்து திலகமிடுவதும், ஆடைதிருத்தி நடனத்திற்கு ஆயத்தமாவதுமாக பல சிலைகள் உள்ளன. மன்னன் விஷ்ணுவர்த்தனனின் மனைவி சாந்தளாதேவி நாட்டியம், இசையில் ஈடுபாடு கொண்டவள் என்பதால் இம்மண்டபத்தை அமைத்துள்ளனர். எப்படி செல்வது: பெங்களூருவில் இருந்து குனிகல் - மத்துார் சாலை வழியாக 270 கி.மீ., விசேஷ நாள்: வைகுண்ட ஏகாதசி ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜெயந்திநேரம்: காலை 7:30 - 1:00 மணி; மாலை 4:00 - 7:30 மணிதொடர்புக்கு: 99647 17388, 08177 - 222 218அருகிலுள்ள தலம்: ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதர் கோயில் 145 கி.மீ., (முன்வினைப்பாவம் தீர...)நேரம்: காலை 7:30 - 1:30 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94488 77648, 08236 - 252 273