உள்ளூர் செய்திகள்

சனாதன தர்மம் - 16

கடவுளுக்கு நன்றி சொல்வோம்'காணாமல் கொடு; கோணாமல் கொடு; கண்டு கொடு' என்பது பழமொழி. அதாவது சூரியன் உதிக்கும் முன் எழுந்து காலை வழிபாடு, சூரியன் உச்சியில் இருக்கும் போது மதிய வழிபாடு, மாலையில் மறையும் முன் மாலை வழிபாடு என மூன்று முறை வழிபடும் முறையைப் பெரியவர்கள் ஏற்படுத்தினர். சின்னச் சின்ன விஷயங்களுக்கும் நன்றி சொல்கிறோம். ஆனால் நம்மை வாழ வைக்கும் கடவுளுக்கு அன்றாடம் நன்றி சொல்வது கடமையல்லவா...மேலும் நன்றி சொல்வது என்பது நல்ல பழக்கம். நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லியே நாளைத் தொடங்க வேண்டும். பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது என்பர். அது எப்படி ஆம். காலையில் விநாயகரையும், இரவில் அனுமனையும் வழிபட்ட பிறகே துாங்கச் செல்ல வேண்டும்.ஏன் முதலில் விநாயகரை வழிபட வேண்டும். அவரே முதற்கடவுள். அவரை வழிபாடு செய்த பிறகே அனைத்து வழிபாடுகளையும் தொடங்க வேண்டும். தமிழுக்கு மட்டுமே உரியது இந்த பிள்ளையார் சுழி. எதை எழுதும் போதும் பிள்ளையார்சுழியுடன் தொடங்குவோம். இதற்கான காரணத்தை காஞ்சி மஹாபெரியவர், ''பின்னால் நடைபெறும் செயல்கள் சுழித்துப் போகாமல் வெற்றி பெற்றிட முன்னாலேயே பிள்ளையாருக்கு சுழியிட்டு விடுகிறோம்'' என்கிறார். காலையில் எழுந்தவுடன் சிரித்த முகமுடையவர்களையே காண வேண்டும். நாம் 'குட்மார்னிங்' சொன்னால் அவர்கள் 'வெரிகுட் மார்னிங்' எனச் சொல்பவராக இருக்க வேண்டும். அவர்கள் ம்ம்... எனச் சோம்பேறியாகத் தலையாட்டினால் நாள் முழுவதும் சோம்பலான மனநிலை உருவாகும். எனவே சிரித்த முகம் உடையவரையே முதலில் காண வேண்டும். விநாயகருக்குச் சொல்லும் பதினாறு நாமங்களில் முதல் நாமமே 'ஓம் சுமுகாய நம' என்பது தான். சிரித்த முகம் கொண்ட விநாயகருக்கு வணக்கம் என்பதாகும். மேலும் யானை முகத்தில் மகாலட்சுமி குடியிருக்கிறாள். அதைப் போலவே தாமரை மலர், வில்வ இலை, பசு மாடு, சுமங்கலியின் வகிட்டிலும் அவள் இருக்கிறாள். யானை முகம் கொண்டவரான விநாயகரைக் காலையில் பார்த்தால் செல்வம் சேரும். அவர் வெற்றியாகிய கனியை கையில் தாங்கியிருக்கிறார். எல்லோருக்கும் தெரிந்த புராணச் செய்தி தான் அது. கைலாயத்திற்கு வந்த நாரதர் பழம் ஒன்றை சிவனிடம் காணிக்கையாக வழங்கினார். அதை அவர் பார்வதியிடம் கொடுத்தார். பார்வதியோ குழந்தைகளான விநாயகர், முருகனுக்கு பகிர்ந்து தர எண்ணினார். அதை முழுமையாகச் சாப்பிட்டால் தான் பலன் என்றார் சிவன். யாருக்கு கொடுப்பது என குழப்பம் ஏற்பட்டது. உடனே சிவன், ''இந்த உலகத்தை யார் முதலில் வலம் வருகிறார்களோ அவர்களுக்கே பழம்'' என்றார். மயிலின் மீதேறி புறப்பட்டார் முருகன். மூஞ்சூறு வாகனத்தில் தம்பிக்கு ஈடாக வலம் வர முடியாது என யோசித்தார் விநாயகர். இப்போதெல்லாம் மூன்றாம் பார்வை, மாத்தி யோசி என்கிறார்களே... அதற்கு வித்திட்டவர் விநாயகர் தான். பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அவலத்தை எண்ணிப் பார்த்து அன்றே 'பெற்றோரே கண் கண்ட தெய்வம்' என உணர்த்திட 'அம்மையப்பரே உலகம்; உலகமே அம்மையப்பர்' என பெற்றோரைச் சுற்றி வந்து ஞானப்பழம் பெற்றார். எனவே வெற்றியாகிய கனியை அவர் தாங்கியிருக்கிறார். பழம் என்றாலே வெற்றி என்பது பொருள். எனவே நாளும் புன்சிரிப்பு கொண்டவரை, லட்சுமி கடாட்சம் நிறைந்தவரை, வெற்றிக் கோப்பை ஏந்தியவரை எங்கும் தேடிச் செல்ல வேண்டாம். இந்த மூன்றும் விநாயகரிடம் உள்ளது. அவரை அதிகாலையில் வழிபட்டால் நாள் முழுதும் உற்சாகம், வெற்றி கிடைக்கும். சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கல், கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப் பொங்கல், கருவிகளுக்கு நன்றி சொல்லும் ஆயுத பூஜை என நன்றி சொல்வதையே உயிர் மூச்சாக கொண்டது சனாதனம். அதிகாலையில் வழிபட்டு நன்றி சொல்லி வெற்றியாளர்களாக வாழ்வோம். சனாதனத்தின் வழிநடப்போம். -தொடரும்இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்93617 89870