விருப்பம் நிறைவேற...
கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாக பெரியாண்டவர் என்னும் பெயரில் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருநிலை கிராமத்தில் சிவபெருமான் குடிகொண்டிருக்கிறார். இவரை அமாவாசையன்று தரிசித்தால் விருப்பம் நிறைவேறும். பிரம்மாவை நோக்கி தவமிருந்தான் சுந்திரபத்திரன் என்னும் அசுரன். அதன் பயனாக,'' மனித வடிவில் சிவபெருமான் வந்தால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும்'' என வரம் பெற்றான். இதன்பின் தேவர்களை துன்புறுத்த தொடங்கினான். கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அப்போது தியானத்தில் இருந்த பார்வதியிடம், 'தேவர்களை காக்க எழுந்திரு' என ஆணையிட்டார். ஆனால் அவளோ பொருட்படுத்தவில்லை. கோபத்தில் சிவன், 'மனிதனாக பூமியில் பிறப்பாய்' என சபித்தார். கண் விழித்த பார்வதியும், 'எம்மில் சரிபாதியான நீயும் மனிதனாக பிறப்பாய்' என சபித்தாள். இதைக் கேட்டு வருந்திய சிவன் நிலை தடுமாறி சித்தம் கலங்கி அலைந்தார். அந்நிலை கண்டு வருந்திய தேவர்கள், ஆதிபராசக்தியிடம் முறையிட்டனர். அவள் சூலாயுதத்தை பூமியில் வீசவே, அது ஓரிடத்தில் நிலைகொண்டது. அதுவே இன்றைய திருநிலை கிராமம். அந்த பகுதிக்கு வந்த போது ஆதிபராசக்தியின் மகிமையால் சுயநினைவு பெற்ற சிவன், 'பெரியாண்டவர்' என்னும் திருநாமத்துடன் இங்கு குடிகொண்டார். சூலத்தால் அசுரனான சுந்திரபத்திரனை வதம் செய்தார். திருநிலை நாயகி என்னும் பெயரில் பார்வதியும் இங்கு குடிகொண்டாள். விருப்பம் நிறைவேற இக்கோயிலில் 21 மண் உருண்டையில் விநாயகர் சிலைகள் செய்து நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். குழந்தை வரம் பெற்றவர்கள் துலாபாரமாக காணிக்கை அளிக்கின்றனர். எப்படி செல்வது:திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கி.மீ., விசேஷ நாள்: தமிழ்ப்புத்தாண்டு, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், அமாவாசை, பவுர்ணமி.நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி தொடர்புக்கு: 98427 40957அருகிலுள்ள தலம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வர் கோயில் 8 கி.மீ., (முன்வினை தீர...)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி தொடர்புக்கு: 94447 10979