உள்ளூர் செய்திகள்

மறுபிறவி இனி இல்லை

பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான குஷ்மேஸ்வரர்(சிவன்) மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகர், வேரூல் என்னும் ஊரில் கோயில் கொண்டிருக்கிறார். இவருக்கு குங்குமணேஸ்வரர், கிருஷ்ணேஸ்வரர் என்றும் பெயருண்டு. இங்குள்ள ஏலா தீர்த்தத்தில் நீராடினால் மறுபிறவி கிடையாது. இங்கு ஓடும் ஏலா என்னும் நதியில் நீராடிய பார்வதிதேவி தினமும் குங்குமத்தால் சிவலிங்கத்தை பூஜித்து வந்தாள். இத்தலத்தை உலகறியச் செய்ய விரும்பிய சிவன் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அதன்படி ஒருநாள் பார்வதிதேவி தன் வலது கையால் குங்குமத்தை தொட்டு 'ஓம் நமசிவாய' என ஜபிக்கும் போது அம்மனின் கையில் கண்ணைப் பறிக்கும் ஒளி தோன்றியது. அது சிவலிங்கத்தினுள் சென்று ஐக்கியமாக அது ஜோதிர்லிங்கமாக ஜொலித்தது. பின்னர் சுயவடிவில் காட்சியளித்த சிவன் அவளைக் கரம்பிடித்தார். திருமணம் நிகழ்ந்ததும் பார்வதியை கயிலாயத்திற்கு அழைத்துச் சென்றார்.பார்வதிதேவி குங்கும அர்ச்சனை செய்ததால் ஜோதிர்லிங்கம் சிவப்பு நிறத்தில் உள்ளது. இதனடிப்படையில் சுவாமி 'குங்குமணேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். அம்மனின் திருநாமம் குங்குமணேஸ்வரி. சுவாமிக்கு குங்குமம், வில்வத்தால் அர்ச்சனை செய்தால் விருப்பம் நிறைவேறும். விநாயகர், முருகர், பைரவர், அனுமன் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. கோயில் முழுவதும் சிவப்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. அருகிலேயே ஓடும் ஏலா நதி புனித தீர்த்தமாக உள்ளது. இந்த ஊரில் வாழ்ந்த சுதர்மன், சுதேஹா என்ற தம்பதியருக்கு குழந்தை இல்லை. தங்கை கிருஷ்ணையை தன் கணவருக்கு திருமணம் செய்தாள் சுதேஹா. தினமும் களிமண்ணால் செய்த 108 சிவலிங்கத்தை வழிபட்டு ஏரியில் கரைத்தாள் கிருஷ்ணை. அதன் பலனாக ஆண் குழந்தை பிறந்தது. தங்கையின் மீது பொறாமை கொண்ட சுதேஹா, சாக்கில் குழந்தையைக் கட்டி ஏரியில் வீசினாள். இதையறிந்த கிருஷ்ணை மனம் கலங்காமல் அன்றும் சிவபூஜை செய்து ஏரிக்குச் சென்றாள். என்ன ஆச்சரியம்! பிரகாசமான ஒளியுடன் அக்குழந்தை கிருஷ்ணையை நோக்கி வந்தது. அப்போது காட்சியளித்த சிவபெருமானை அந்த இடத்திலேயே எழுந்தருளும்படி வேண்டினாள். அங்கு கோயில் எழுப்பப்பட்டது. மகாராஷ்டிராவில் மட்டும் ஐந்து ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளன. சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற எல்லோரா குகைக்கோயில் இக்கோயிலுக்கு அருகில் உள்ளது. எப்படி செல்வது: சத்ரபதி சம்பாஜி நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை NH52 வழியாக 39 கி.மீ.,விசேஷ நாள்: பிரதோஷம், அமாவாசை, ஞாயிறு, மகாசிவராத்திரிநேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94216 86834, 02437 - 245 675அருகிலுள்ள தலம்: நாசிக் திரியம்பகேஸ்வரர் கோயில் 203 கி.மீ., (சர்ப்ப தோஷம் தீர...)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 02594 - 233 215, 234 251