உள்ளூர் செய்திகள்

மீனவர்களின் காவல் தெய்வம்

மார்ச் 8, 2024 - மகாசிவராத்திரி கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் காவல் தெய்வமாக சிவபெருமான் வீற்றிருக்கும் கோயில் கேரளா, கொல்லம் மாவட்டம் செறியழிக்கலில் உள்ளது. தமிழகக் கோயில் பண்பாட்டை மூலாதாரமாகக் கொண்டு கடற்கரையோரத்தில் அமைந்த ஒரே கோயில் இது.இதை காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கின்றனர். ஆனால் கருவறையில் சிவலிங்கமும் விஷ்ணுவும் அருகருகே தனித்தனி பீடத்தில் காட்சி தருகின்றனர்.முன்னொரு காலத்தில் இங்கு வாழ்ந்த முதியவர் ஒருவர் காசியில் பல ஆண்டுகள் தங்கியிருந்தார். அவர் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த சிவலிங்கம் காசி விஸ்வநாதர் எனப் பெயர் பெற்றது. தேவ பிரசன்னத்தில் அங்கு விஷ்ணுவின் திருவருள் இருப்பதை அறிந்த நம்பூதிரி அவரையும் பிரதிஷ்டை செய்தார். எதிரே நந்தி, கருடன் இருப்பது உழைப்பின் பெருமையை உணர்த்துகிறது. விநாயகர், பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தருக்கு தனி சன்னதி உள்ளன. ஐம்பொன்னால் ஆன நவக்கிரகங்களும் தனி சன்னதியில் உள்ளனர். சுனாமியில் இருந்து மக்களை காத்த இவருக்கு 'மீனவர்களின் காவலர்' என பக்தர்கள் சுவாமியை சிலாகித்து சொல்கின்றனர். நாராயண குருவும், மாதா அமிர்தானந்த மயியும் இங்கு தரிசனம் செய்துள்ளனர். பிரகாரம், கோயில் முகப்பு யாவும் கற்கள் பதிக்கப்பட்டு தங்கக் கொடிமரமும் நிறுவப்பட்டுள்ளது. சன்னதியின் சுவர்களில் கடவுளின் திருவிளையாடல்கள், கோயில் வரலாறு சிற்பமாக வடிவமைக்கப்பட்டு வரலாறும் இடம் பெற்றுள்ளது. இக்கோயிலை நிர்வகிக்கும் மீனவர்கள், சில நுாற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தஞ்சாவூரில் இருந்து இங்கு குடியேறி உள்ளனர். திங்கள் கிழமையன்று பெண்கள் வெள்ளை ஆடை அணிந்து விரதமிருந்து மாவிளக்கு ஏற்றி வழிபட குழந்தை பாக்கியம் உண்டாகும். மகாசிவராத்திரியான இன்று (மார்ச் 8, 2024) ஆராட்டு உற்ஸவம் அரபிக்கடலில் சிறப்பாக நடக்கிறது. எப்படி செல்வது: கருநாகப்பள்ளியில் இருந்து 5 கி.மீ., விசேஷ நாள்: திங்கட்கிழமை, நவராத்திரி, மகாசிவராத்திரிநேரம்: அதிகாலை 5:00 - 11:45 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 95622 85452அருகிலுள்ள தலம்: பகவதி அம்மன் கோயில் (நினைத்தது நிறைவேற...) நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி