கன்னியாகுமரியில் ஒரு சதுரகிரி
மதுரை மாவட்டம் சதுரகிரி மகாலிங்க சுவாமி கோயில் சித்தர்கள் பூஜித்த தலம். இதைப் போல கன்னியாகுமரி மாவட்டத்தின் சதுரகிரியாக மேக்கரை என்னுமிடத்தில் குன்றின் மீது மகாலிங்க சுவாமி குடியிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகில் உள்ள குன்றின் மீது விநாயகர், முருகன், மாரியம்மன், காளியம்மனுக்கு பீடங்கள் அமைத்து சிலர் வழிபட்டனர். பின்பு கோயில் அமைக்கப்பட்டது. ஒரு சமயத்தில் கோயிலுக்கு அருகிலுள்ள புதரில் பவுர்ணமி தோறும் ஒளி கிளம்புவதும், பின் அடங்குவதுமாக இருந்தது. இதையறிந்த ஊர் மக்கள், புதரை சீர்படுத்திய போது இரு கொன்றை மரங்களுக்கு நடுவே ஒரு பாறை இடுக்கில் சதுரகிரி மகாலிங்க சுவாமி காட்சியளித்தார். 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்னும் குறளுக்கு ஏற்ப அந்தோணி என்னும் அடியவர் மூலம் உலகிற்கு தம்மை வெளிப்படுத்திக் கொண்டார் சிவன். பிரசன்னம் பார்த்த போது சுவாமியின் திருநாமம் சித்தகிரீஸ்வரர் என்றும், சித்தர்களால் பூஜிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. திருப்பணிகள் செய்து கோபுரம் அமைத்து முதல் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. தரை மட்டத்தில் இருந்து 220 அடி உயரத்தில் கோயில் உள்ளது. 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என திருமந்திரம் சொல்வதைப் போல சிவனருள் பெற்று அனைவரும் வாழ வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் இந்த அடியவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் சதுரகிரியாக மேக்கரை சித்தகிரீஸ்வரர் கோயில் திகழ்கிறது. வேதியா போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றிகதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றிஎன்று பாடியபடி நல்வாழ்வு பெற மேக்கரையை தரிசிப்போம். எப்படி செல்வது: நாகர்கோவிலில் இருந்து 18 கி.மீ.,விசேஷ நாள்: பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி.நேரம்: காலை 6:00 - இரவு 6:00 மணிதொடர்புக்கு: 97865 28606, 85240 28100அருகிலுள்ள தலம்: அழகிய பாண்டியபுரம் அண்ணாமலையார் கோயில் 2 கி.மீ., (முக்தி பெற...)நேரம்: காலை 6:30 - 9:00 மணி; மாலை 5:30 - 6:30 மணிதொடர்புக்கு: 94422 58130