கரை சேர...
கிரகதோஷம், நோய், கடன், குடும்ப பிரச்னை உருவாக காரணம் முற்பிறவியில் நாம் செய்த தீவினை. இதில் இருந்து விடுதலை அளித்து நம்மை கரைசேர்ப்பவராக கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவல்நத்தம் காசீஸ்வரர் இருக்கிறார். கர்நாடக எல்லைப் பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசத்திரத்தை அடுத்துள்ள ஊர் ஆவல்நத்தம். குகை ஒன்றில் அமைந்த குடைவரைக் கோயில் இது. இங்கு விமானம், துவார பாலகர்கள் கிடையாது. குறுகிய வாசல் வழியாக குகைக்குள் மண்டியிட்டுச் சென்றே தரிசிக்க வேண்டும். அருகில் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது. கோயிலுக்கு பின்புறத்தில் தீர்த்தக் குளம் உள்ளது. இதனருகே உள்ள கிணற்றில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியம் சேரும். தொடர்ந்து மூன்று நாட்கள் நீராடினால் தோல், மனநோய்கள் தீரும். இங்குள்ள தீர்த்தம் சிவபெருமானின் அம்சமாக உள்ளது. 'சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே' எனப் போற்றுகிறது தேவாரம். 'ஆர்த்தப்பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்' என திருவாசகம் குறிப்பிடுகிறது. செய்த தவறுக்கு வருந்தி இங்கு நீராடினால் விமோசனம் கிடைப்பதோடு விரும்பிய வரம் கிடைக்கும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தீர பக்தர்கள் மண்ணால் செய்த கால்நடைகளை காணிக்கை அளிக்கின்றனர். கன்று தானம் செய்கின்றனர். பத்தாம் நுாற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் கன்னடத்தைச் சேர்ந்த அரசர்கள் ெஹாய்சாளர்கள், சோழர்கள், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். கோயிலுக்கு அருகில் பசவேஸ்வரர், சிவகுமாரசாமி கோயில்கள் உள்ளன.எப்படி செல்வது : கிருஷ்ணகிரி - ஒசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ.,ல் குருபரப்பள்ளி உள்ளது. அங்கிருந்து 'தீர்த்தம்' செல்லும் சாலையில் 2 கி.மீ., விசேஷ நாள்: பவுர்ணமி, பிரதோஷம், மகாசிவராத்திரிநேரம்: காலை 6:00 - மதியம் 12:00 மணி; திங்கட்கிழமை மட்டும் காலை 6:00 - மாலை 6:00 மணி தொடர்புக்கு: 97519 35998அருகிலுள்ள தலம்: ஓசூரு சந்திரசூடேஸ்வரர் கோயில் 43 கி.மீ., (மனபலம் அதிகரிக்க...)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 04344 - 292 870