உள்ளூர் செய்திகள்

பிதுர் சாபம் தீர...

பிதுர் சாபம் தீர மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரரை தரிசியுங்கள். நவக்கிரகங்களில் ஒருவரான புதன் பகவான் இங்கு வழிபட்டுள்ளார். இதனால் இத்தலம் புதனுக்குரியது. பிரம்மனிடம் பெற்ற வரத்தால் 'மருத்துவன்' என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் கொடுத்தான். இதனால் அவர்கள் மாறுவேடத்தில் திருவெண்காட்டில் வாழ்ந்தனர். பின்தொடர்ந்து வந்த அசுரனால் இவர்களை பார்க்க முடியவில்லை. இதற்காக தவம் செய்த அசுரன், அவர்களை பார்க்கும் வரத்தையும், சூலாயுதத்தையும் பெற்றான். பின் தேவர்களை தாக்கவே அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார் ரிஷபதேவர். ஆனால் அசுரன் அவரையும் காயப்படுத்தினான். சிவபெருமானிடம் முறையிட்டார் ரிஷபதேவர். தனது ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து அகோரமூர்த்தியை தோன்றச் செய்தார். அகோர உருவை கண்டதும் சிவபெருமானிடம் சரணடைந்தான் அசுரன். இக்கோயிலின் பிரகாரத்தில் அகோர மூர்த்தியின் காலடியில் சரணடைந்த அசுரனையும், நிருத்த மண்டபத்தில் காயம் பட்ட ரிஷப தேவரையும் காணலாம். காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்றாகவும், தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 11 வது தலமாகவும், சக்தி பீடங்களில் பிரணவ சக்தி பீடமாகவும் இக்கோயில் உள்ளது. இங்கு திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர் என மூன்று சுவாமிகளும், துர்கை, காளி, பிரம்மவித்யாம்பாள் என மூன்று அம்பிகைகளும், அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என மூன்று தீர்த்தங்களும், வடவால், வில்வம், கொன்றை என மூன்று தலவிருட்சங்களும் உள்ளன. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் உள்ளது. பட்டினத்தாருக்கு 'திருவெண்காடர்' என்ற பெயர் ஏற்படக் காரணமான தலம் இது. இங்கு ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் நான்கு முறையும், நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறுமுறையும் அபிேஷகம் நடக்கிறது. பிதுர் தோஷம் தீர இங்குள்ள சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவேதாரண்யேஸ்வரர், புதன் பகவானை வழிபட வேண்டும். அத்துடன் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து, வெண்காந்தள் மலர் சூட்டலாம். பிரசாதமாக பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நைவேத்யம் செய்தால் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும்.கல்வி, அறிவு, பேச்சுத் திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவத்தில் சிறந்து விளங்கலாம். திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் பதினேழு தீபம் ஏற்றி, பதினேழு முறை வலம் வரலாம். ஞாயிறு தோறும் நடக்கும் நள்ளிரவு பூஜையில் பங்கேற்றால் துன்பம் தீரும்.எப்படி செல்வது: சீர்காழியில் இருந்து 15 கி.மீ.,விசேஷ நாள்: கந்தசஷ்டி, கார்த்திகை மூன்றாவது ஞாயிறு, மாசித்திருவிழா.நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:30 - 9:30 மணிதொடர்புக்கு: 04364 - 256 424அருகிலுள்ள தலம்: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் 24 கி.மீ., (கலைகளில் சிறக்க...)நேரம்: அதிகாலை 5:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 04364 - 222 345, 223 779