நோய்க்கு குட்பை
உடல்நலம் இல்லாமல் வருந்துகிறீர்களா... கவலை வேண்டாம். தெலுங்கானா நல்கொண்டாவில் குடியிருக்கும் மட்டல்லி நரசிம்மரை தரிசியுங்கள். காடாக இருக்கும் இப்பகுதியில் கிருஷ்ணாநதி பாய்கிறது. பரத்வாஜ முனிவரின் தலைமையில் ரிஷிகள் பலர் இங்கு நரசிம்மரை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இங்கு வழிபாடு மறைந்தது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் அனுமலா மச்சிரெட்டியின் கனவில் நரசிம்மர் தோன்றி, 'மட்டபல்லியிலுள்ள குகையில் இருக்கும் என்னை வழிபடு'' என உத்தரவிட்டார். ஆதிசேஷன் குடை பிடிக்க சங்கு, சக்கரம், கதாயுதம் தாங்கியபடி நரசிம்மர் குகைக்குள் இருப்பதைக் கண்டார் மன்னர். கோயிலை செப்பனிட்டார். முகலாயர் காலத்தில் இக்கோயிலை இடிக்கும் சூழல் வந்தது. இந்நிலையில் பக்தையான சென்னுாரி கீரம்மா, 'கலியுகம் முடியும் வரை இங்கு எழுந்தருள வேண்டும்' என நரசிம்மரிடம் வேண்டினார். என்ன ஆச்சர்யம் பாருங்கள். மொகலாயர் முற்றுகையிட வந்த போது திடீரென வண்டுகள் கூட்டமாக வந்ததால் மட்டபல்லியை விட்டு ஓடினர். குகை போன்ற அமைப்பில் உள்ள கருவறையின் நுழைவு வாசலில் லட்சுமி நரசிம்மர், கஜலட்சுமியின் சிற்பங்கள் உள்ளன. மூலவர் நரசிம்மர் பத்மாசனத்தில் அமர்ந்தபடி கையில் சங்கு, சக்கரம் ஏந்தியிருக்கிறார். சுவாமியின் மீது குடை பிடிப்பது போல ஆதிசேஷன் இருக்கிறார். அருகில் மகாலட்சுமி தாயார் தாமரையில் அமர்ந்திருக்கிறார். இக்கோயிலில் 11 நாட்கள் தங்கி கிருஷ்ணா நதியில் நீராடி சுவாமியை தினமும் 32 முறை வலம் வந்தால் நோய்கள் பறந்தோடும். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். கிரகதோஷம் மறையும். எப்படி செல்வது: ஐதராபாத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை என்.எச். 65 வழியாக 218 கி.மீ., விசேஷ நாள்: நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:30 மணிதொடர்புக்கு: 08683 - 227 922அருகிலுள்ள தலம்: விஜயவாடா நரசிம்மர் கோயில் 138 கி.மீ., (குழந்தை பாக்கியம் கிடைக்க...)நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 5:00 - 7:00 மணிதொடர்புக்கு: 08645 - 232 945, 233 174