ரத்தன்பூர் மகாமாயாதேவி
உயிர்களை எல்லாம் காக்கும் பராசக்தி ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு பெயரில் ஆட்சி புரிகிறாள். சக்தி பீடங்கள் எனப்படும் இத்தலங்களில் ஒன்றான சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ரத்தன்பூர் மகாமாயா கோயிலில் முப்பெரும் தேவியருக்கும் சன்னதிகள் உள்ளன. சிவனின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினார். அதில் பங்கேற்க மருமகனுக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை. நியாயம் கேட்பதற்கு தந்தையிடம் வந்த மகள் தாட்சாயணியை அவமானப்படுத்தினார். இதனால் அவள் யாகத்தீயில் விழுந்து உயிர் நீத்தாள். தன் மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி ருத்ர தாண்டவம் ஆடினார் சிவன். இதனால் உலகமே அழியும் நிலை ஏற்பட்டது. அதை தடுக்க தாட்சாயணியின் உடலை சக்கரத்தால் பல துண்டுகளாக வெட்டினார் திருமால். அதன் பாகங்கள் பூமியில் பல இடங்களில் விழுந்தன. இத்தலங்களே சக்தி பீடங்களாக உள்ளன. அவளின் தோள் பகுதி இத்தலத்தில் விழுந்தது. இத்தலம் நான்கு யுகமாக இருப்பதால் 'சதுர்யுகி' எனப் பெயர் பெற்றது. இங்கு அம்மனுக்கு 'மகாமாயாதேவி' என்பது திருநாமம். மகிஷாசுரமர்த்தினி என்றும் பெயருண்டு. முன்பு மணிப்பூர் என இருந்த இந்த நகரத்தை 1045ல் முதலாம் ரத்தன்தேவ் மன்னர் தன் பெயரில் 'ரத்தன்பூர்' என மாற்றினார். இவர் வேட்டைக்குச் சென்ற போது மகாமாயா தேவி ஒளி வடிவில் காட்சியளித்தாள். அம்மனின் அருள் நிறைந்திருப்பதை உணர்ந்து அங்கு கோயில் கட்டினார். மகாகாளி, லட்சுமி, சரஸ்வதி சன்னதிகள் இங்குள்ளன. மகாமாயாதேவிக்கு விளக்கேற்றினால் மகிழ்ச்சியான மணவாழ்வு அமையும். எப்படி செல்வது: ராய்ப்பூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை என்.எச்.30 வழியாக 144 கி.மீ., விசேஷ நாள்: நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி.தொடர்புக்கு: 07753 - 255 526நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மதியம் 1:00 - 8:30 மணிஅருகிலுள்ள தலம்: ராஜ்நந்தகான் பம்லேஷ்வரி கோயில் 214 கி.மீ., (குழந்தை பாக்கியத்திற்கு) நேரம்: காலை 6:00 - 9:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94252 04990