உள்ளூர் செய்திகள்

ஆராரோ ஆரிராரோ . . . இந்த தாலாட்டின் பொருள் விளக்குகிறார் வாரியார்

* உலகம் முழுவதும் நிறைந்த இறைவனை, எளிதாகக் கிடைக்கக் கூடிய பூ மற்றும் நீரினால் வழிபட வேண்டும். வழிபாட்டுக்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவையாகும்.* இடையறாது பேசும் நாவை நரம்பின்றிப் படைத்திருக்கிறான் இறைவன். அது இஷ்டத்திற்கு வளைகிறதே என்பதற்காக, நாம் கண்டதையெல்லாம் பேசக்கூடாது. அவனுடைய நாமங்களைச் சொன்னால், அது நாக்களித்தவனுக்கு நாம் செய்யும் நன்றியாகும்.* இறைவன் தந்த இந்த உடம்பினால் அவனை வழிபடுவது கடமை. தவறினால் அது மடமை.* கோயிலில் ஒருமித்த மனத்துடன் வழிபாடு செய்ய வேண்டும். வீண் வார்த்தைகள் பேசுவதும், எச்சில் துப்புதலும், பிற தீமைகள் செய்வதும் அறவே கூடாது.* வயலில் என்ன விதை விதைக்கிறோமோ, அதுவே விளைந்து நாம் உண்ணக் கூடியதாக அமைகிறது. அதுபோல் மனதாலும், வாக்காலும், காயத்தாலும் பிற உயிர்களுக்கு நன்மை செய்தால் நாமும் துன்பமின்றி இன்பமாக வாழ முடியும்.* சந்நியாசம் வாங்கிவிட்ட மகன் எதிரே வந்தாலும், தந்தை வணங்க வேண்டும். ஆனால், சந்நியாசம் வாங்கிவிட்டாலும், அந்த சந்நியாசி மகன் தாயை வணங்க வேண்டும். அத்தனை சிறப்புப் பெற்றவள் தாய்.* கடவுள் பக்தி இருந்தால் மனதில் சாந்தியும் அமைதியும் நிலைத்திருக்கும். உண்ணாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், கடவுளை எண்ணாமல் இருக்கக் கூடாது.* இறைவன் நடுநிலை தவறாதவன்; பாரபட்சமில்லாதவன்; நாம் செய்த தன் வினைகளுக்கு ஏற்பச் சுகதுக்கங்களை வகுத்து விதிக்கின்றான். இறைவனுடைய அருளாணையால் விதிக்கப்பட்டது விதி எனப்படுகிறது.* நமக்கு உண்மையான உறவு கடவுள் தான். அதனால் தான் குழந்தையைத் தாலாட்டும் போது 'ஆராரோ, ஆரிராரோ' (யார் யாரோ யார் இவரோ...இந்தக்குழந்தை யாரோ...இது என்ன வினையை விதைத்து விட்டு என் வயிற்றில் வந்து கருவாயிற்றோ.. என்பது இதன் பொருள்) என்று பாடுகிறார்கள்.* இறைவன் எங்கும் இருப்பினும் கோயிலில் விளங்கித் தோன்றுகிறான். மின்சாரக் கம்பி முழுவதும் மின்சாரம் பரவியிருந்தாலும் பல்ப்பில் வெளிப்படுவது போல், எங்கும் பரந்து நிறைந்துள்ள இறைவனுடைய திருவருள் கோயிலிலுள்ள திருவுருவத்தில் வெளிப்பட்டு அருள் புரிகிறது.* இறைவனின் கருணையை நினைத்து உடலும், உள்ளமும் உருக நின்றாலே, அவனுடன் இரண்டறக் கலந்து, பேரின்பத்தைப் பெற்று விடலாம்.* நெற்றியில் ஜோதி இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக நெற்றியில் பொட்டு வைக்கிறோம். புருவ மத்தியில் நாட்டம் வைத்தவனுக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை.* விறகைக் கடைந்தால் தீ வெளிப்படும், பாலைக் கடைந்தால் நெய் வெளிப்படும், அதுபோல் தியானம் புரிந்தால் இறைவன் வெளிப்பட்டுக் காட்சி தருவான்.