அழகு கலை நிபுணர்களே பாதூர் பெருமாளை தரிசியுங்கள்!
அழகுக்கலை நிபுணர்கள் தங்கள் தொழில் சிறக்க, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பாதூர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலுக்கு வருகின்றனர். புரட்டாசி சனிக்கிழமையன்று இவரை தரிசித்து வருவோமா!தல வரலாறு:இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனின் மனைவி தன் முன்வினைப்பயனால், தோல் வியாதியால் பாதிக்கப்பட்டாள். வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. அழகு மங்கியது. எனவே அவளை ஒதுக்கிய மன்னன், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்தான். மனைவி மிகவும் வருந்தினாள். தனது நோய் நீங்கவும், கணவனின் எண்ணத்தை மாற்றவும் வேண்டி இத்தலத்தில் பெருமாளை வேண்டினாள். அவளது பக்தியில் மகிழ்ந்த பெருமாள் வியாதியை நீக்கி அருளியதோடு, அவளை முன்பிருந்ததைவிட மேலும் அழகாக மாற்றினார். மன்னனுக்கும் நல்ல புத்தி கொடுத்தார். பிரிந்தவர்கள் இணைந்தனர்.அழகு தரும் அழகன்:மன்னன் மனைவியின் வியாதியை நீக்கி அவளுக்கு அழகு தந்தும், மன்னனின் தவறான எண்ணத்தை போக்கி அவனது உள்ளம் அழகாக இருக்கும்படியும் அருளியதால் இத்தலத்து பெருமாள் 'அழகர்' என்று பெயர் பெற்றார். தாயாருக்கும் 'அழகுத்தாயார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அழகர் இங்கு உற்சவராக இருக்கிறார். தோல் நோயால் பாதிக்கப்படுபவர்கள், பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். அழகுக்கலை நிபுணர்கள் தங்கள் தொழில் சிறக்க சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், பிரிந்த தம்பதியினர் வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம், குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.தல சிறப்பு:மகான்கள் ஐக்கியமான தலங்கள் பிருந்தாவனம் எனப்படும். அதில் ராமானுஜர் ஐக்கியமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் விசேஷமானதாக இருக்கிறது. அதேபோல் இக்கோவிலில் அகோபில மடத்தின் 36வது பட்டம் ஜீயர் அழகியசிங்கர், வண்சடகோப ஸ்ரீனிவாச மகாதேசிகன் சுவாமியின் ஜீவபிருந்தாவனம் உள்ளது. இவரது அவதார நட்சத்திரமான ஆடி மாதம் பூசம் நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. வேதம் படிக்க, கல்வியறிவு பெருக, தொழில் மேன்மைஅடைய, நோய்கள் குணமாக பிருந்தாவனத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவர். ஆவணி 7 முதல் 12 வரை சூரிய ஒளிக்கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படுவது சிறப்பு.கோவில் அமைப்பு:மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார். தாயார் அலமேலு மங்கை. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், விஷ்வக்சேனர், மத்வாச்சாரியார், ராமானுஜர், மகாதேசிகன் ஆகியோருக்கும் சன்னிதி இருக்கிறது. கொடிமரம் அருகே கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் உள்ளனர்.திருவிழா:புரட்டாசியில் பத்து நாள் நவராத்திரி பிரமோற்ஸவம் நடக்கிறது. அக்.2.ல் விழா துவங்குகிறது. அக்.6ல் தங்க கருட சேவையும், 10ல் தேரோட்டமும் நடக்கிறது. இது தவிர வைகுண்ட ஏகாதசி, வைகாசி விசாகத்தில் கருட சேவை, ஆடியில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், , ஐப்பசியில் பவித்ர உற்சவம், பங்குனியில் தாயார் திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்.நேரம்: காலை 6:30 - இரவு 7:30 மணி.இருப்பிடம்:உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் வழியில் 8 கி.மீ. தூரத்தில் பாதூர் கோவில்.அலை / தொலைபேசி: 97878 84479, 04149 - 209 789.