சுபயோகம் வந்தாச்சு!
பக்தர்களின் கனவை நனவாக்கும் நரசிம்மர் திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் வீற்றிருக்கிறார். இவரை ஐந்து புதன்கிழமை தரிசித்து வெள்ளை மலர்களால் அர்ச்சித்தால் போதும். வாழ்வில் சுபயோகம் தொடங்கி விடும். தலவரலாறு:திரேதாயுகத்தின் முடிவில் விஷ்ணுவின் வழிகாட்டுதலால், பிரம்மா பூலோகத்தில் மண் எடுத்து கும்பம் செய்தார். அதில் வேதம், சாஸ்திரங்களை ஆவாஹனம் செய்து, அடுத்த யுகத்திற்கான பணிகளைத் தொடங்கினார். பிரம்மா செய்த கும்பம் உள்ள தலம் கும்பகோணம் என்றும், குடத்திற்கான மண் எடுத்த இடம் சாரேக்ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டது. அந்த சாரக்ஷேத்திரமே தற்போது 'திருச்சேறை' எனப்படுகிறது. காவிரிக்கும், கங்கைக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி உண்டானது. கங்கைக்கும் மேலான சிறப்பை பெற விரும்பிய காவிரியிடம் பிரம்மா, விஷ்ணுவை நோக்கி தவமிருக்கும்படி கூறினார். காவிரியும் திருச்சேறை தலத்தில், பெருமாளை நினைத்து தவமிருந்தாள். காவிரிக்கு காட்சியளித்த சாரநாதப் பெருமாள் அவளுக்கு கங்கையினும் மேலான மகிமையை அளித்ததுடன், அவளது வேண்டுகோளின் படி, அவளுக்கு காட்சி கொடுத்த திருச்சேறையிலேயே கோயில் கொண்டார். இங்குள்ள சாரபுஷ்கரணி தீர்த்தம் பாவங்களைப் போக்கவல்லது.குழந்தைப்பெருமாள்: தவமிருந்த காவிரிக்கு முதலில் குழந்தை வடிவில் காட்சியளித்தார். குழந்தையாக வந்திருப்பது இறைவனே என உணர்ந்த காவிரி வணங்கினாள். இதன் பின் கருடவாகனத்தில் தாயார்களுடன் எழுந்தருளினார். குழந்தை வடிவில் வந்ததால் 'மாமதலைப்பிரான்' என்ற பெயர் பெற்றார். 'மதலை' என்றால் 'குழந்தை'. மார்க்கண்டேயரும் இத்தலப் பெருமானை வழிபட்டுள்ளார்.கோயில் அமைப்பு:கிழக்குநோக்கி அமைந்த இக்கோயிலுக்கு ராஜகோபுரத்துடன் இரு பிரகாரங்கள் உள்ளன. பெருமாளும் தாயாரும் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர். மூலவர் நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம், செந்தாமரை, கதாயுதம் ஏந்தி நிற்கிறார். வைகுண்டத்தில் விஷ்ணு கையில் தாமரை இருப்பதைப் போல இங்கும் மூலவர் கையில் தாமரை இருப்பது குறிப்பிடத்தக்கது. சாரநாயகி தாயார், ராஜகோபாலன், ராமர், மணவாள மாமுனிகள், கண்ணன் காவிரி சந்நிதிகளும் உள்ளன. பாஞ்சராத்ர ஆகமப்படி ஆறுகால பூஜை தினமும் நடக்கிறது. பஞ்சசார க்ஷேத்திரம்: திருச்சேறையில் பெருமாள், தாயார், விமானம், குளம், தலம் ஆகிய ஐந்தும் சாரநாதப்பெருமாள், சாரநாயகி, சார விமானம், சார புஷ்கரணி, சார க்ஷேத்திரம் என்ற பெயருடன் திகழ்வதால் 'பஞ்சசார க்ஷேத்திரம்' என அழைக்கப்படுகிறது. உற்சவர் பெருமாள் பஞ்ச லட்சுமி என்னும் ஐந்து தேவியருடன் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, சாரநாயகி ஆகியோருடன் மார்பிலும் லட்சுமியைத் தாங்கியிருப்பது சிறப்பு.நினைத்தது நிறைவேறும்:ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நரசிம்மர் அர்த்தமண்டபத்தில் வீற்றிருக்கிறார். இவருக்கு சுவாதி நட்சத்திரத்தன்று திருமஞ்சனமும், பானகத்துடன் தளிகையும் படைக்கப்படுகிறது. எண்ணிய எண்ணம் நிறைவேற நரசிம்மருக்கு வெள்ளியன்று பானக நிவேதனம், ஐந்து புதன்கிழமை தொடர்ந்து வெள்ளை மலர்களால் அர்ச்சனையும் பக்தர்கள் செய்கின்றனர்.தைப்பூசத் தேர்:தைப்பூசத்தன்று பெருமாள் காவிரிக்கு அருள்புரிந்தார். இதையொட்டி தைமாதம் பிரம்மோற்ஸவம் நடத்தப்படுகிறது. அட்சய திருதியை யன்று கருடசேவை, ஆடியில் 108 கலச திருமஞ்சனம், நவராத்திரி, கார்த்திகையில் பவித்ரோத்ஸவம், வைகுண்டஏகாதசி மற்ற விழாக்கள்.திறக்கும்நேரம்:காலை 7-11 மாலை4.30- இரவு7.30.இருப்பிடம்:தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் 40 கி.மீ., போன்:0435 - 246 8001, 94441 04374.- சி.வெங்கேடஸ்வரன், சிவகங்கை