இழந்த பொருளை மீட்க பைரவருக்கு மிளகாய் அபிஷேகம்
திருவள்ளூர் மாவட்டம் கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோவிலிலுள்ள பைரவருக்கு, மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்தால் திருட்டு மற்றும் ஏமாந்து, இழந்த பொருள் மீண்டும் கிடைக்கும் என்பது ஐதீகம்.தல வரலாறு: சிவன், பார்வதி திருமணம் நடந்த போது, பூமி சமநிலை இழந்தது. சமப்படுத்த சிவன், அகத்தியரை தெற்கு நோக்கி அனுப்பினார். சிவனிடம் அகத்தியர், தான் விரும்பும் இடத்தில் எல்லாம், இறைவனின் மணக்கோலத்தைத் தரிசிக்கும் வரம் பெற்றார். வரும் வழியில் ஒருநாள் கனவில் தோன்றிய சிவன், திருக்கண்டலம் என்னும் தலத்தின் மகிமையை உணர்த்தி, சோமாஸ்கந்தராக (சிவபார்வதியுடன் முருகன் நடுவில் இருக்கும் கோலம்) காட்சியளித்தார். அதன்பின் சிவன், இங்கு லிங்கவடிவில் எழுந்தருளி 'சிவாநந்தீஸ்வரர்' எனப் பெயர் பெற்றார். அம்பிகைக்கு 'ஆனந்தவல்லி' என பெயர். சுந்தர விநாயகர், ஜபமாலை ஏந்திய முருகன், பார்வதியுடன் தட்சிணாமூர்த்தி, காளத்தீஸ்வரர், ஆஞ்சநேயர், பைரவருக்கு சன்னதிகள் உள்ளன.சிவனின் விளையாட்டு: கண்டலம் அருகிலுள்ள பூண்டிக்கு வந்த சம்பந்தர், அங்குள்ள குசஸ்தலை ஆற்றின் கரையில், பூஜை பொருட்களை வைத்து விட்டு நீராடினார். திரும்பி வந்த போது அவற்றைக் காணவில்லை. பின் சம்பந்தர், திருக்கண்டலம் வந்து, சிவாநந்தீஸ்வரரைத் தரிசித்த போது, பூஜைப் பொருள் சுவாமி அருகில் இருப்பதைக் கண்டார். சம்பந்தரை வரவழைக்க, சிவனே இந்த விளையாடலை நடத்தியதாக அசரீரி ஒலித்தது. அதைக் கேட்ட சம்பந்தர், சிவாநந்தீஸ்வரர் மீது பதிகம் பாடினார். இந்த தலத்தின் புராணப்பெயர் திருக்கள்ளில்.மிளகாய் பொடி அபிஷேகம்: இழந்த பொருளை சம்பந்தர் திரும்பப் பெற்ற தலம் என்பதால், திருட்டு கொடுத்தவர்கள், ஏமாந்தவர்கள் பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பொருள் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம். அவ்வாறு கிடைத்த பின், பாலபிஷேகம் செய்து பைரவரை குளிர்விக்கிறார்கள்.எப்படி செல்வது?* கோயம்பேடு - பெரியபாளையம் வழியாக 25 கி.மீ., * திருவள்ளூரில் இருந்து கன்னிகைப்பேர் வழியாக 12 கி.மீ.,நேரம்காலை 6:00 - 12:00 மணி, மாலை 4:00 - 8:00 மணி.தொடர்புக்கு: 044 - 2762 9144