சித்திரசபை நடராஜர்
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ஓவிய வடிவில் நடராஜர் இருக்கிறார். அதனால் இதை சித்திரசபை என அழைக்கின்றனர். கைலாய மலையில் நடந்த சிவபார்வதி திருமணத்தை தரிசிக்க தேவர்களும், முனிவர்களும் ஒன்று கூடினர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர ஆரம்பித்தது. இதை சமப்படுத்த அகத்திய முனிவரை தெற்கு திசை நோக்கி அனுப்பினார் சிவன். அப்போது அவரிடம் குற்றால மலையின் சிறப்பை எடுத்துச் சொல்லி, அங்கு விஷ்ணுவாக இருக்கும் தன்னை சிவலிங்கமாக மாற்றி வழிபடவும் உத்தரவிட்டார். அதன்படி அகத்தியர் இங்கு வந்த போது, துவாரபாலகர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். வருந்திய அகத்தியர், அருகே இலஞ்சி என்னும் தலத்தில் அருளும் முருகனிடம் நடந்ததை தெரிவித்தார். நெற்றியில் திருநீறை எடுத்து விட்டு திருமண் இட்டுச் செல்லும்படி முருகன் யோசனை கூறினார். அகத்தியரும் நாமம், துளசி மாலை அணிந்து சென்றவுடன், கோயிலுக்குள் அனுமதித்தனர். அகத்தியர் கருவறைக்குச் சென்றதும், விஷ்ணுவின் உச்சந்தலையில் கை வைத்து 'திருமேனி குறுக குறுக' என சொல்லி அழுத்தியபோது, சிலை சிவலிங்கமாக மாறியது. அதன் பின் அவருக்கு சிவ - பார்வதி திருமணக் காட்சியும் இங்கு கிடைத்தது. ஐப்பசி மாதம் பூரநட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் இங்கு நடக்கிறது.சுவாமியை 'குற்றால நாதர்' என்றும், அம்மன்களை 'குழல்வாய்மொழி, பராசக்தி' என்றும் அழைக்கின்றனர். பிரகாரத்தில் நன்னகரப் பெருமாள் என்னும் பெயரில் மகாவிஷ்ணு சன்னதி உள்ளது. நடராஜருக்குரிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை கோயிலுக்கு அருகில் உள்ளது. இங்கு நடராஜர், சிவகாமியை ஓவியமாக வரைந்துள்ளனர்.எப்படி செல்வது: * மதுரையிலிருந்து 165 கி.மீ., * திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ., * தென்காசியிலிருந்து 5 கி.மீ.,விசேஷ நாட்கள்: ஆனி உத்திரம், ஆடி அமாவாசை, மார்கழி திருவாதிரை, பங்குனி பிரம்மோற்ஸவம் நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:30 மணிதொடர்புக்கு: 04633 - 283 138, 210 138அருகிலுள்ள தலம்: இலஞ்சி முருகன் கோயில் (4 கி.மீ.,)