உள்ளூர் செய்திகள்

கரிக்குருவியால் எழுந்த கல்விக்கோயில்

தேர்வில் வெற்றி பெற ராமநாதபுரம் மாவட்டம் மேலப்பெருங்கரையில் உள்ள சொக்கநாதரை தரிசிக்க பலன் கிடைக்கும். தல வரலாறு: காட்டில் கரிக்குருவி ஒன்று வாழ்ந்தது. அது வசித்த மரத்தடியில் ஒரு சிவனடியார் தங்கியிருந்தார். ஒருநாள், ''சீடர்களே.... பாண்டிய நாடான மதுரையில் சொக்கநாதரை வழிபட்டால் முன்வினை பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.'' என்றார். இதை கேட்ட கரிக்குருவியும், மதுரை சொக்கநாதரிடம் சரணடைந்தது. மதுரையில் சிவதரிசனம் பெற கரிக்குருவிக்கு காரணமாக இருந்ததால், இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பினர். சுவாமிக்கு சொக்கநாதர் என்றும், அம்மனுக்கு அங்கயற்கண்ணி என்றும் பெயர் சூட்டப்பட்டது.கல்விக்கோயில்: கருவறையில், சதுரபீட அமைப்பில் சொக்கநாதர் காட்சியளிக்கிறார். மதுரை போல, சுவாமி சன்னதியை எட்டு யானைகள் தாங்கும் விதத்தில் மண்டபம் அமைத்துள்ளனர். இவர் 'அட்டாள (எட்டு யானை) சொக்கநாதர்' எனப்படுகிறார். பொங்கலன்று கல்யானைக்கு கரும்பு கொடுக்கும் வைபவம் சிறப்பாக நடக்கும். சுவாமிக்கு வலப்புறம் அம்மன் அங்கயற் கண்ணி இருக்கிறாள். புதன் கிரகம் தொடர்பான தோஷம் போக்குபவளாக அருள்வதால், விசேஷ நாட்களில் பச்சை வஸ்திரம் அணிவிக்கின்றனர். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற சுவாமி, அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். ஜுரதேவ லிங்கம்: நோய் தீர அருள்புரியும் ஜுரதேவர், கோயில்களில் சிலை வடிவில் இருப்பார். இங்கு சிலை வடிவுடன், லிங்க வடிவிலும் ஜுரலிங்கம் என்னும் பெயரில் வீற்றிருக்கிறார். காய்ச்சல், ஜலதோஷத்தால் சிரமப்படுபவர்கள் மிளகு ரசம் படைத்தும், பால் அபிஷேகம் செய்தும் வழிபடுகின்றனர். கோயில் எதிரே பெரிய குளம் உள்ளது. இதன் மேற்கு கரையில் அமைந்த ஊர் என்பதால் 'மேலப்பெருங்கரை' என அழைக்கப்படுகிறது. பிரகாரத்தில் முருகன், நாய் வாகனம் இல்லாத யோக பைரவர், மகாவிஷ்ணு, நாகர், ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கோயில் முகப்பில் சிவன் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த சிற்பம் உள்ளது.செல்வது எப்படி: மதுரை - ராமேஸ்வரம் ரோட்டில் 60கி.மீ., துாரத்தில் பார்த்திபனுார். இங்கிருந்து 2 கி.மீ., விசேஷ நாட்கள்: மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, குருப்பெயர்ச்சி நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:30 - 07:30 மணிதொடர்புக்கு: 99767 11487அருகிலுள்ள தலம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில்