மயிலாடுதுறை செல்ல மறக்காதீங்க!
UPDATED : அக் 14, 2016 | ADDED : அக் 14, 2016
அக்.17 ஐப்பசி மாத பிறப்புஐப்பசி மாதம் காவிரியில் நீராடி, மயிலாடுதுறை மாயூரநாதரை வழிபட்டால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.தல வரலாறு: பார்வதியை மகளாக பெற்ற தட்சன் யாகம் நடத்தினான். அதற்கு மருமகன் சிவனை அழைக்கவில்லை. மேலும் யாககத்திற்கு சென்ற மகளையும் அவமானப்படுத்தினான். வீரபத்திர வடிவெடுத்த சிவன் யாகத்தை அழித்தார். தன் சொல்லை மீறி சென்ற பார்வதியை மயிலாகப் பிறக்கும்படி தண்டித்தார். அந்த மயில் இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தது. சிவனும் மயில் வடிவில் வந்து கவுரி நடனம் ஆடி, தேவியை ஆட்கொண்டார். சிவன் மயிலாக வந்த தலம் என்பதால் சுவாமிக்கு,'மயூரநாதசுவாமி' என பெயர் உண்டானது. 'மயூரம்' என்றால் 'மயில்'. காலப்போக்கில் இது மாயூரநாதர் ஆனது. ஊரின் பெயர் மாயூரம். மாயவரம் என்று இருந்து, மயிலாடுதுறை என பெயர் பெற்றது. இந்த சிவனை அப்பர், சம்பந்தர் தேவாரத்தில் பாடியுள்ளனர். துலா ஸ்நானம்: ஐப்பசியில் காவிரியில் நீராடி மாயூரநாதரை வழிபட்டால் பாவம் நீங்கி புண்ணியம் உண்டாகும். ஐப்பசியை துலா மாதம் என்பர். இதனால் ஐப்பசி நீராடல் 'துலா ஸ்நானம்' எனப்படுகிறது. இத்தலத்தில் சிவன் நந்தியின் கர்வத்தைப் போக்கினார். காவிரியின் நடுவில் நந்தி சிலை உள்ளது. நந்தியின் பெயரால் 'இடப தீர்த்தம்' என்கின்றனர். ஐப்பசி முப்பது நாட்களும், கார்த்திகை முதல் நாளிலும் இங்கு நீராடுவது சிறப்பு. தினமும் சுவாமி தீர்த்தக்கரைக்கு எழுந்தருள்கிறார். கங்கை நதி ஐப்பசி அமாவாசையன்று காவிரியில் நீராடி பாவத்தைப் போக்கிக் கொண்டதாக கருதப்படுகிறது. சேலை கட்டிய சிவன்: நாதசர்மா என்ற சிவபக்தர் தன் மனைவியுடன் இங்கு வந்து நீராடி சிவனுடன் ஐக்கியம் அடைந்தார். அவர் ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி, அவரது பெயரிலேயே உள்ளது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்மன் சன்னிதிக்கு வலப்புறத்தில் 'அனவித்யாம்பிகை' என்ற பெயரில் உள்ளது. இந்த லிங்கத்திற்கு சிவப்பு சேலை அணிவிக்கப்படுகிறது.மயில் அம்பிகை: பிரகாரத்தில் ஆதி மாயூரநாதர் சன்னிதி உள்ளது. இந்த சுவாமி அருகில் அம்பாள் மயில் வடிவில் இருக்கிறாள். சுவாமி சன்னிதிக்கு பின்புறம் உள்ள முருகன் பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். கந்தசஷ்டியின் போது, முருகன் பராசக்தியிடம் வேல் வாங்குவது வழக்கம். ஆனால் இங்கு தந்தையான சிவனிடம் வேல் வாங்குவது மாறுபட்டது. தாண்டவம் ஆடிய நடராஜர் தனி சன்னிதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்கு முதல் பூஜை நடக்கிறது. ஐப்பசி விழாவில் சிவபெருமான் அம்மனுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.ஆடிப்பூர அம்மன்: தட்சனின் யாகத்திற்கு வந்த ஒரு மயிலை அம்பிகை ஏற்று அருள்புரிந்தாள். மயிலுக்கு அபயம் அளித்ததால் 'அபயாம்பிகை' என்று பெயர் ஏற்பட்டது. அஞ்சல்நாயகி என்றும் பெயர் உண்டு. இவள் வலது கையில் கிளியுடன் இருக்கிறாள். இவளைத் தவிர, ஆடிப்பூர அம்மன் என்னும் பெயரில் வீரசக்தியின் வடிவமாக ஒரு அம்பிகை தனி சன்னிதியில் இருக்கிறாள். ஆடிப்பூரம், ஆடி வெள்ளியில் இவள் காவிரிக்கரைக்கு எழுந்தருள்வாள். பிரகாரத்தில் சந்தன விநாயகர் சன்னிதி உள்ளது. சந்தன மரத்தால் ஆன இவரை அகத்தியர் வழிபட்டதால், 'அகத்திய சந்தன விநாயகர்' என்கின்றனர். தீப்பிழம்புடன் சனி: நவக்கிரக சன்னிதியில் உள்ள சனி, தலையில் தீப்பிழம்புடன் 'ஜுவாலை சனி'யாக இருக்கிறார். இவர் அருகில் தனியாக சனீஸ்வரர் காகத்தின் மீதமர்ந்து சிவலிங்க பூஜை செய்கிறார். சனி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நற்பலன் உண்டாகும். சிவ சண்டிகேஸ்வரர், தேஜஸ் சண்டிகேஸ்வரர் என இருவர் ஒரே சன்னிதியில் உள்ளனர். அஷ்டலட்சுமி, சட்டைநாதர், சிவபூஜை செய்யும் விஷ்ணு, குதம்பை சித்தர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. நேரம்: காலை 5:30 - மதியம் 12:00 மணி, மாலை 4:00 - இரவு 8:30 மணி.தொலைபேசி: 04364 223 779.