உள்ளூர் செய்திகள்

அமைதி வேணுமா...

அவமானம் நேர்ந்ததா... கவலை வேண்டாம். நாகப்பட்டினம் சவுந்தரராஜப் பெருமாளுக்கு துளசி மாலை, நெய் தீபம் ஏற்ற அமைதி கிடைக்கும். உத்தானபாத மகாராஜனின் மகன் துருவன். சிறுவனான இவன் ஒருமுறை தன் தந்தையின் மடியில் உட்கார ஆசைப்பட்டான். ஆனால் அவனது சிற்றன்னையால் அவமானப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டான். தன் தாயின் அனுமதியுடன் காட்டிற்கு புறப்பட்டான். பூலோகம் மட்டுமின்றி தேவலோகமும் தனக்கு அடிமையாக வேண்டும் என மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருந்தான். தேவலோகம் பறி போய் விடுமே என தேவர்கள் தவத்தை கலைக்க முயன்றனர். ஆயினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவனுக்கு நேரில் காட்சியளித்தார் மகாவிஷ்ணு. சுவாமியின் அழகில் மயங்கிய துருவன் மனநிறைவு பெற்றான். ''பெருமாளே! உலகத்தை அடிமையாக்கி என்ன செய்யப் போகிறேன்? கடவுளுக்கு அடிமையாக வாழ்வது தானே உண்மையான மகிழ்ச்சி. உமது பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியம் தர வேண்டும்'' என்றான். மகாவிஷ்ணுவும் சவுந்தரியமான (அழகான) கோலத்துடன் துருவனுக்காக இத்தலத்தில் தங்கினார். அவரே சவுந்தரராஜப் பெருமாள். நாகங்களின் தலைவனான ஆதிசஷேன் இங்கு தீர்த்தம் உண்டாக்கினார். அதற்கு 'சார புஷ்கரணி' என்று பெயர். அதன் கரையில் தங்கி தவமிருந்து மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் பாக்கியத்தை பெற்றார். நாகம் தவமிருந்ததால் 'நாகப்பட்டினம்' என இந்த ஊருக்கு பெயர் வந்தது. 108 திவ்யதேசங்களில் நாகையும் ஒன்று. நான்கு யுகம் கண்டவரான இத்தல பெருமாள் மிக பழமையானவர். நின்ற, கிடந்த, இருந்த கோலங்களில் இருக்கிறார். தசாவதாரங்களை விளக்கும் செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிக்கிறது. சார புஷ்கரணியில் நீராடி வழிபட்டவர்கள் சூரிய மண்டலத்தில் வாழும் பாக்கியம் பெறுவர். எட்டு கைகளுடன் இருக்கும் அஷ்டபுஜ நரசிம்மர் சன்னதி உள்ளது. இவர் பிரகலாதனுக்கு ஒரு கையால் ஆசியளித்தும், மற்றொரு கையால் அபயம் அளித்தும், மற்ற கைகளால் இரண்யனை வதம் செய்த நிலையிலும் இருக்கிறார். இங்குள்ள அஷ்டபுஜ துர்கையை வழிபட்டால் காலசர்ப்பதோஷம், திருமணத்தடை நீங்கும். தீயவர்களான கண்டன், சுகண்டன் என்னும் சகோதரர்கள் சார புஷ்கரணியில் நீராடி பாவங்களை போக்கிக் கொண்டனர். இவர்களின் சிற்பங்கள் பெருமாள் சன்னதியில் உள்ளது.எப்படி செல்வது* நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.,விசஷே நாள்: ஆனி உத்திரம், ஆடிப்பூரம், பங்குனி பிரம்மோற்ஸவம்,நேரம்: காலை 7:30 - 12:00 மணி; மாலை 5:30 - 9:00 மணிதொடர்புக்கு: 04365 - 221 374அருகிலுள்ள தலம்: நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயில்(1கி.மீ.,)நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 5:00 - 9:30 மணிதொடர்புக்கு: 98945 01319, 93666 72737