ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி
முன்னோர் வழிபாட்டு நாளான ஆடி அமாவாசை அன்று துாத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமியை தரிசிப்போம்.சேர்மன் அருணாசல சுவாமி திருச்செந்துார் அருகிலுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமி - சிவனனைந்த அம்மையார் தம்பதிக்கு 1880, அக்டோபர் 2ல் மகனாக பிறந்தார்.அனைத்து கலைகளிலும் வல்லவராக திகழ்ந்த அருணாசலம் சுவாமிகள் ஏரலில் மவுன விரதம் இருந்து பக்தியோகத்தை கடைபிடித்தார். அவரை தரிசிக்க வந்த மக்களுக்கும், நோயாளிகளுக்கும் ஆறுதல் அளித்ததோடு, அவர்களின் பிரச்னை தீர உதவினார். இவரது நீதி, நேர்மை, திறமையை கண்ட அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்கள் ஏரல் பேரூராட்சியின் சேர்மனாக பதவி வகிக்க அனுமதி அளித்தனர். 1906 செப்டம்பர் 5ல் அவர் பதவி ஏற்றார். 1908 ஜூலை 27 வரை பணியாற்றிய இவர் 'சேர்மன் அருணாசலம்' என மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்ந்தார். 28வயது வரை வாழ்ந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒருநாள் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனை அழைத்து அவருக்கு ஆசியளித்து ''தம்பி! நான் 1908 ஜூலை 28 ஆடி அமாவாசையன்று மதியம் 12:00 மணிக்கு இறைவனின் திருவடி சேர இருக்கிறேன். ஏரலுக்கு தென்மேற்கில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் வடகரையிலுள்ள ஆலமரத்தின் அருகில் என்னை சமாதியில் வைத்து மண்ணும், மலர்களும் இட்டு மூடு. அப்போது மேலே கருடன் வட்டமிட்டு பறக்கும்'' என்று கூறினார். அதன்படியே சுவாமியும் இறைவனை அடைந்தார். அவர் கூறிய படியே கருத்த பாண்டியனும் செய்தார்.அன்று முதல் ஏரல் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்குகிறார். குறிப்பாக மனநிலை பாதித்தவர்கள் இங்கு தங்கி குணமடைந்து செல்கிறார்கள். பிரசாதமாக திருமண், தீர்த்தம் தருகின்றனர். ஆடி அமாவாசையன்று கொடியேற்றப்பட்டு 12 நாள் திருவிழா நடக்கும். விளாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மன் சுவாமி தினமும் எழுந்தருளுவார். சுவாமியிடம் வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் சேர்மக்கனி, சேர்மராஜ் என பெயரை சூட்டுகின்றனர்.எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து ஏரல் 45 கி.மீ., விசேஷ நாட்கள்நு ஆடி அமாவாசை, தை அமாவாசைநேரம்: காலை 6:00 - 11:00 மணி ; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு : 04630 - 271 281அருகிலுள்ள தலம்: திருச்செந்துார் முருகன் கோயில்