உள்ளூர் செய்திகள்

கனவில் வந்த கணபதி

கர்நாடகா மங்களூரு நகரில் ஹம்டன் கட்டா பகுதியில் அமைந்துள்ள சரவு மகாகணபதி கோயிலுக்கு வாங்க. கைமேல் பலன் கிடைக்கும். முன்பு இப்பகுதியை ஆண்ட மன்னன் வீரபாகு. ஒரு நாள் வேட்டைக்கு சென்ற போது அங்குள்ள நதிக்கரையில் புலியும் பசுவும் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. இதை அறியாத மன்னன் புலியிடம் இருந்து பசுவைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அம்பு விட, தவறுதலாக பசு மீது பாய்ந்து அது இறந்தது. பசுவைக் கொன்ற பாவம் தீர அந்த வனத்தில் வசித்த பரத்வாஜ முனிவரிடம் பாவ விமோசனம் கேட்டார் மன்னர். அவரோ சிவலிங்க பிரதிஷ்டை செய்து குளத்தை வெட்டி பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய் என சொன்னார். அதன்படியே கோயிலை உருவாக்கிய மன்னரின் வம்சத்தினரே கோயிலை பராமரித்து வந்தனர். அவர்களில் ஒருவரான வீர நரசிம்ம பங்க ராஜாவிற்கு குழந்தையில்லை. அதைப் போக்க கனவில் தோன்றிய கணபதி, 'என்னையும் சேர்த்து வழிபடு' என சொல்லி அருள் செய்தார். அதன்படியே கோயில் கொண்டுள்ள கணபதி ஒரு சமயம் இக்கோயில் செல்வங்களை கொள்ளையடிக்க வந்த திப்புசுல்தானையும், அவனது கூட்டங்களையும் யானை வடிவில் தோன்றி விரட்டி அடித்தார். பக்தர்கள் தங்களது உடமைகளை பாதுகாக்க இவ்விநாயகரை வழிபடுகின்றனர். இங்கு விநாயகர் சதுர்த்தி நாளில் நடைபெறும் தேர்த்திருவிழா பிரபலம். விழாக் காலங்களில் புராண வரலாறுகளை இயல், இசை, நாடகமாக்கி பக்தர்களுக்கு தெரிவிக்கிறது கோயில் நிர்வாகம். மன்னரால் உருவாக்கப்பட்ட சரவு தீர்த்தத்தில் நீராடி வழிபடுபவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும். மதிற்சுவர்களுடன் கூடிய முன் வாசல் வழியே சென்றால் பெரிய மண்டபம். அதனை அடுத்து கருவறையில் சரவு கணபதி, சரபேஸ்வரர் அருள் பாலிக்கின்றனர். இவர்களை வணங்கினால் தெரியாமல் செய்த பாவமும், முன்வினையும் தீரும். விநாயகரின் பிரதிஷ்டையின் போதே இக்கோயில் அருகில் இருக்கும் மங்களாதேவியையும் சித்தி லட்சுமியையும் பிரதிஷ்டை செய்தார் பரத்வாஜ முனிவர். எப்படி செல்வது: மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ., விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி மஹாசிவராத்திரிநேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி தொடர்புக்கு: 0824 - 244 0328அருகிலுள்ள தலம்: மங்களா தேவி கோயில் 3 கி.மீ., (ஆற்றல் பெருக) நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:30 மணிதொடர்புக்கு: 0824 - 241 5476