விஷ்ணுரூப விநாயகர்
கர்நாடகா உடுப்பி மாவட்டம் கும்பாசி ஆனைகுட்டேயில் விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர் விஷ்ணுரூபத்தில் காட்சியளிக்கிறார்.மங்களூருவைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் வறட்சி நிலவியது. அங்கு வாழ்ந்த முனிவர்கள் அகத்தியரின் உதவியை நாட அவர் தவமிருந்தார். கும்பாசுரன் என்பவன் தவத்திற்கு இடையூறு செய்தான். அவனை அழிக்குமாறு விநாயகரிடம் முறையிட்டார் அகத்தியர். அசுரனை அழிக்கும் சக்தி, பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு இருந்தது. அதற்காக தும்பிக்கையில் ஆயுதம் ஏந்தியபடி யானை வடிவில் தோன்றினார் விநாயகர். யானை வருவதைக் கண்ட பீமன், அதைப் பின்தொடர்ந்தான். ஓரிடத்தில் யானை ஆயுதத்தை கீழே நழுவ விட்டு மறைந்தது. அதைப் பயன்படுத்தி அசுரனைக் கொன்றான் பீமன். விநாயகரின் அருளால் மழையும் பொழிந்தது. மகிழ்ந்த முனிவர்கள் இங்குள்ள குன்றில் கோயில் கட்டினர். அசுரனின் பெயரால் இப்பகுதி 'கும்பாசி' எனப்பட்டது. ஆனே குட்டே என்பதற்கு 'யானைக் குன்று' என்பது பொருள்.ஒரே கல்லினால் ஆன விநாயகர் 12 அடி உயரத்தில் நெற்றியில் நாமம் அணிந்தபடி இருக்கிறார். விஷ்ணுரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்றும் பெயருண்டு. மேலிரு கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியபடி இவர் கீழ்வலது கையால் வரம் அளிக்கவும், கீழ்இடது கையால் சரணடைந்தவரைக் காக்கவும் செய்கிறார்.வேண்டுதல் நிறைவேற 'அரிசி கணபதி பூஜை' நடத்துகின்றனர். இதற்காக 400 கிலோ அரிசி, 125 தேங்காய்களைப் பயன்படுத்தி விநாயகரை அலங்கரிப்பர். இதற்கு 'மூடுகணபதி பூஜை' என்றும் பெயருண்டு. தினமும் வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் உலக நன்மைக்காக 'ரெங்க பூஜை' என்னும் விளக்கு வழிபாடு நடக்கிறது. அபிஷேகத்திற்காக குன்றின் மீதுள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுக்கப்படுகிறது. சிவன், பார்வதியுடன் இருக்கும் கைலாயக் காட்சி இங்குள்ளது.சங்கடஹர சதுர்த்தியன்று துலாபார காணிக்கை செலுத்துகின்றனர். திருமணத்தடை நீங்கவும், வியாபாரத்தில் லாபம் பெருகவும் கணபதி ஹோமம் நடத்துகின்றனர். பறவைகள், கால்நடைகளுக்கு நோய் ஏற்படாமல் இருக்க கார்த்திகை மாதம் பட்சி சங்கர பூஜை நடக்கிறது.எப்படி செல்வது* மங்களூரு - கொல்லுார் சாலையில் 96 கி.மீ.,* உடுப்பியிலிருந்து 30 கி.மீ.,* பெங்களூரு- மங்களூரு சாலையில் 400 கி.மீ.,விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பிரம்மோற்ஸவம்நேரம்: அதிகாலை 5:30 - 12:30 மணி; மாலை 4:30 - 9:00 மணிதொடர்புக்கு: 08254 - 261 079, 267 397, 272 221அருகிலுள்ள தலம்: உடுப்பி கிருஷ்ணர் கோயில் 30 கி.மீ.,