சங்கு சக்கரத்துடன் கருடாழ்வார்
UPDATED : ஜூலை 20, 2018 | ADDED : ஜூலை 20, 2018
ஜூலை 21 பட்சிராஜர் திருநட்சத்திரம்கும்பகோணம் அருகிலுள்ள வெள்ளியங்குடி பெருமாள் கோயிலில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி சதுர்புஜ கருடாழ்வார் அருள்புரிகிறார். கருடஜெயந்தியான பட்சிராஜர் திருநட்சத்திரத்தன்று இவரை வழிபட்டால் கிரக தோஷம், விஷபயம் நீங்கும். தல வரலாறு: மகாவிஷ்ணு வாமனர் வடிவில் தோன்றி மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண்ணை தானமாக கேட்டார். வந்திருப்பது விஷ்ணு என்பதை அறியாத மகாபலி சம்மதித்தான். ஆனால் அதை தடுக்க விரும்பிய அசுரகுரு சுக்கிராச்சாரியார், வாமனரின் தாரா பாத்திரத்தின் (கெண்டி) துவாரத்தை வண்டு வடிவெடுத்து தீர்த்தம் வராமல் தடுத்தார். விஷ்ணு தர்ப்பை புல்லால் துவாரத்தைக் குத்தவே, வண்டான சுக்கிராச்சாரியாரின் பார்வை போனது. பல திருத்தலங்களில் வழிபட்ட சுக்கிராச்சாரியார், இத்தலத்திலுள்ள பெருமாளை வழிபட்டு பார்வை பெற்றார். இதன் காரணமாக இத்தலம் வெள்ளியங்குடி என பெயர் பெற்றது. 'வெள்ளி' என்பது சுக்கிரனின் பெயர்களில் ஒன்று. இங்கு தரிசித்தால் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும். மூலவரின் பெயர் கோலவில்லி ராமர். உற்ஸவர் சிருங்கார சுந்தரர். தாயார் மரகதவல்லி. சங்கு சக்கர கருடன்: அசுர குல சிற்பியான மயன் பிரம்மாவின் வழிகாட்டுதலால் பூலோகத்தில் தவமிருந்தார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் கருடன் மீது ஏறி சங்கு சக்கரதாரியாக காட்சியளித்தார். அப்போது மயன், தசரத குமாரனாக ராமாவதார கோலத்தில் காட்சிதர வேண்டினார். தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு, ராமனாக வில், அம்புடன் தரிசனம் தந்தார். 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கைகளுடன் இருக்கிறார். இவருக்கு துளசிமாலை அணிவித்து தீபமேற்றி வழிபட்டால் கிரகதோஷம், விஷபயம் நீங்கும். பாற்கடல் நாதர்: கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட நிலையில் பெருமாள் வீற்றிருக்கிறார். திருமேனியில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் இருக்கும் இவருக்கு பாற்கடல்நாதர் என்றும் பெயருண்டு. கருவறை மீது புஷ்கலா வர்த்தக விமானம் உள்ளது. காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் தங்கி, திருப்பணி செய்தார். சுக்கிர, பிரம்ம, பரசுராம, இந்திர தீர்த்தங்கள் உள்ளன. சுக்கிரத்தலம்: பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சுக்கிரன் கருவறையில் அணையா தீபமாக இருக்கிறார். சுக்கிர பரிகார தலமான இங்கு வழிபடுவோருக்கு பார்வை குறைபாடு, சுக்கிர தோஷத்தால் வரும் திருமணத்தடை, குழந்தை பேறின்மை நீங்கும். வெள்ளிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு. கும்பகோணத்தைச் சுற்றி ஒன்பது வைணவ நவக்கிரகத் தலங்கள் உள்ளன. அதில் சூரியனுக்கு கும்பகோணம் சாரங்கபாணி கோயில். சந்திரனுக்கு திருப்புள்ளங்குடி அருகிலுள்ள நாதன்கோவில். அங்காரகன் என்னும் செவ்வாய்க்கு திருநறையூர் நாச்சியார்கோவில். புதனுக்கு திருப்புள்ளபூதங்குடி, குருவுக்கு திருஆதனுார், சனிக்கு ஒப்பிலியப்பன் கோவில், ராகுவுக்கு கபிஸ்தலம். கேதுவுக்கு திருக்கூடலுார் ஆடுதுறை பெருமாள் கோயில்.இருப்பிடம்: கும்பகோணம்- அணைக்கரை சாலையில் சோழபுரம் 8 கி.மீ. இங்கிருந்து அன்னை காலேஜ் சாலையில் 6 கி.மீ., விசேஷ நாட்கள்: வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, கருடஜெயந்திநேரம்: காலை 8:00 - 12:00 மணி: மாலை 5:00 - 06:30 மணிதொடர்புக்கு: 94433 96212, 98410 16079அருகிலுள்ள தலம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயில்