நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் வல்லவன்
* நல்ல பேனா இருந்தால் மட்டும் போதாது. அது தானே எழுதப் போவதில்லை. அதை வைத்திருப்பவன் நல்லவனாக இருந்தால் தான் நல்ல செயல்களுக்கு வித்திடும் சரியான சொற்களை எழுத முடியும்.* உள்ளத்தில் இருக்கும் அன்பை உன் கண்களில் வெளிப்படுத்து. அப்போது சிலை வடிவில் இருக்கும் தெய்வம் உன்னிடம் பேசுவதைக் காண்பாய். * உலகில் யாரையும் சோம்பேறியாக வாழ கடவுள் படைக்கவில்லை. உன்னைத் தாங்கும் பூமி எப்போதும் சுழன்ற படியே இருக்கிறது. உழைத்து வாழ்வதில் தான் உண்மையான சுகம் என்பதை உணர்ந்திடு.* மனதில் கர்வம் இருந்தால் பேச்சும், செயலும் முரண்படும். ஆனால் குற்றமற்ற மனிதனிடம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு இருக்கும். * உன் மனதை முகம் பார்க்கும் கண்ணாடி போல துாய்மையாக வைத்துக் கொள். எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதை கடவுளுக்கு அர்ப்பணம் செய்து விடு. * உலகத்தைச் சீர்படுத்துவது கடவுளின் பொறுப்பு. முதலில் உன்னை சீர்திருத்து. மற்றது தானாக நடக்கும். * பிறருடைய குறைகளை பேசிக் கொண்டு பொழுதை வீணாக்காதே. உண்மையான பக்தனின் கண்களில் கேடுகள் தென்படுவதில்லை.* அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்று சொன்னால் மட்டும் போதாது. அதை வாழ்வில் பின்பற்றவும் செய். அனைவரையும் உன் சகோதர, சகோதரிகளாகக் கருது.* யார் வேண்டுமானாலும் மற்றவருக்கு உபதேசம் செய்யலாம். ஆனால் அதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல.* தர்மத்தை கடைபிடித்து முறை தவறாமல் நல்வழியில் வாழத் தெரிந்தவனே சான்றோன். அவனால் இந்த உலகிற்கே நன்மை உண்டாகும்.* இயற்கை தன்னிடமுள்ள செல்வத்தை எல்லாம் உலகிற்கு அளித்து மகிழ்வது போல, நீயும் உன்னிடமுள்ளதை கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்வாயாக.* நியாயமற்ற வழியில் வந்த செல்வத்தை மனதால் கூட தீண்டாதே. அது உயிர் உள்ளவரை உன்னைச் சித்ரவதை செய்து கொண்டேயிருக்கும்.* பொருளைத் தேடும் முயற்சியுடன், பிறருக்கு உதவி செய்து அருளையும் தேடிக் கொள். ஏனென்றால் இந்த உலகமே கடவுளின் குடும்பமாக இருக்கிறது.* சத்திரத்தில் தங்கி இளைப்பாறுவது போல உயிர்கள் பூமியில் சிலகாலம் தங்கி விட்டுச் செல்கின்றன. யாருக்கும் இந்த உலகம் சொந்தமானது அல்ல.* பிறருடைய கருத்தையும் செவி கொடுத்து கேள். அனைவரையும் மதிக்கக் கற்றுக் கொள். அப்போது உலகமே உன்னை மதிப்பதைக் காண்பாய்.* பணியாள் போல அடக்கமுடன் இரு. இதனால் மனதில் ஆணவம் உண்டாகாது. வாழ்வில் பணிவுடன் இருப்பவன் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவான்.* கடவுளை நினைத்துக் கொண்டே சாப்பிட்டால், உணவு பிரசாதமாகி விடும். இதனால் மனமும், உடலும் பரிசுத்தம் அடையும்.நல்லதை எழுதச் சொல்கிறார் சாந்தானந்தர்