உள்ளூர் செய்திகள்

குவா...குவாக்கு கொலுசு

காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் கிராமத்தில் தாமோதரப்பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு வழிபட்டு குழந்தைப்பேறு அடைந்தவர்கள், கொலுசு காணிக்கையை செலுத்துகின்றனர். கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசேஷமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. ஆயர்பாடியில் வாழ்ந்த நந்தகோபர் - யசோதை தம்பதியின் மகனாக கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார் மகாவிஷ்ணு. பாலகனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித விளையாடல்கள் செய்தருளினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி முறையிட்டனர். அவன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, கயிறால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள் யசோதை. அப்போது அவனது வயிற்றில் கயிறின் தடம் ஏற்பட்டது. அதனால் 'தாமோதரன்' எனப் பெயர் பெற்றான். 'தாம' என்றால் 'கயிறு' அல்லது தாம்பு. உதரன் என்றால் 'வயிறு'. அதாவது 'கயிறால் கட்டப்பட்ட வயிறை உடையவன்' என்பது பொருள். இந்த தாமோதரப் பெருமாளை தரிசிக்க விரும்பிய மகரிஷிகள் இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக காட்சியளித்த பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூலவர் தாமோதரப்பெருமாள் நின்ற கோலத்தில் அருள்கிறார். அபிேஷகத்தின் போது பெருமாளின் வயிற்றில் தழும்பைக் காணலாம். ரோகிணி நட்சத்திரத்தன்று ராஜ அலங்காரத்தில் இருப்பார். தனி சன்னதியில் திருமாலழகி என்னும் பெயரில் தாயார் இருக்கிறார். வெள்ளிக்கிழமையில் நெய் விளக்கு ஏற்றி, தாயாரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.எப்படி செல்வது* சென்னை - வேலுார் நெடுஞ்சாலையில் 85 கி.மீ., * காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ.,விசேஷ நாட்கள்வைகாசி வசந்த உற்ஸவம், ஆனி லட்சார்ச்சனை, ஆடி அன்னக்கூடை பாவாடை உற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, பங்குனி உத்திரம்நேரம்: காலை 8:00 - இரவு 8:00 மணிதொடர்புக்கு: 96294 06140, 99448 12697அருகிலுள்ள தலம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் (15 கி.மீ.,)