உள்ளத்தில் இருப்பதை உதட்டில் வைப்பவன் எவனோ அவனே மனிதன்!
UPDATED : பிப் 03, 2017 | ADDED : பிப் 03, 2017
பிப்.9 வடலூர் ஜோதி தரிசனம் * உள்ளத்தில் இருப்பதை மறைத்து, வெளியுலகில் நல்லவர் போல பேசுபவர்களிடம் பழக வேண்டாம். ஒருமித்த மனதுடன் கடவுளை நினைக்கும் உத்தமர்களுடன் நட்பு கொள்ள வேண்டும்.* அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவன் கருணையின் இருப்பிடமாக உள்ளார். கடலைப் போல பெரிதிலும் பெரிதாகவும், சிறு கடுகு போல சிறியதிலும் சிறியதாகவும் இருக்கிறார்.* உலகமெல்லாம் நலமுடன் வாழ தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நம் அனைவரின் தனி நலமும் அதிலேயே அடங்கி விடும்.* ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் கொள்கையுடன் வாழுங்கள். எல்லா உயிர்களிடமும் கடவுளைக் காண்பதே உயர்ந்த பக்தியாகும்.* பக்தி மூலம் இறை அனுபவத்தைப் பெறுவதற்காகவே நமக்கு இந்த உடலும், உயிரும் கடவுளால் வழங்கப்பட்டுள்ளது.* உயிர்கள் மீது இரக்கம் கொள்வதையே ஜீவகாருண்யம் என்கிறோம்.* காலத்தைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியம். அரிய மனிதப்பிறவியைப் பெற்றிருக்கும் நாம், பக்தியில் ஈடுபட்டு வாழ்வை பயனுள்ளதாக்க வேண்டும்.* எல்லாம் கடவுளின் செயல் என்ற உண்மையை உணர்ந்தவர்களின் வாழ்வில் துன்பமோ, கவலையோ உண்டாகாது.* எண்ணமும், செயலும் ஒன்றுபட வேண்டும். கைகள் ஜெபமாலையை உருட்ட, வாய் திருநாமத்தை ஜெபிக்க மனம் மட்டும் உலக விஷயங்களில் அலைந்து திரியக் கூடாது.* தியானம் மூலம் கடவுளை எளிதாக அடைய முடியும். விடாமுயற்சியும், இடைவிடாத பயிற்சியும் தியானம் செய்ய மிக அவசியம்.* நிழல் தரும் மரங்களைப் பாதுகாப்பதும், பறவைகளைக் கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாகப் பறக்க விடுவதும், பக்தர்களுக்கு உதவி செய்வதும் சிறந்த அறச்செயல்களாகும்.* பிறருக்கு உதவ முடியாவிட்டாலும், மற்றவர் தர்மம் செய்வதை தடுக்கக் கூடாது. பேச்சில் கோபம், கடுஞ்சொல், பொய் கலந்திருக்கக் கூடாது.* பயத்தில் நடுங்குவதும் தவறு. அறவே பயம் இல்லாமல் இருப்பதும் தவறு. தேவையான சமயத்தில் பயப்பட வேண்டியதற்கு பயப்படுவதும் மனிதனுக்கு அவசியம்.* தனிமையில் இருந்து மன அமைதியைப் பெருக்குங்கள். கடவுளின் அருளைப் பெறுவதற்காக விழிப்புடன் இருங்கள்.* கருணை என்னும் பண்பு நிறைந்தவராக இருங்கள். உள்ளத்தில் அன்பு ஊற்றாகப் பெருகச் செய்யுங்கள்.* படைத்த கடவுளை உயிர்கள் மறந்து வாழ்கின்றன. ஆனால், கடவுள் உயிர்களை ஒருபோதும் மறந்ததில்லை.* பல காலம் கடவுளை வணங்கிப் பெறுகின்ற நற்பலன்களை எல்லாம், ஒரே நாளில் செய்யும் சிறு தர்மத்தினால் அடைய முடியும்.சொல்கிறார் வள்ளலார்