உள்ளூர் செய்திகள்

பொறுமையாக இருப்பவன் சக்தியற்றவன் அல்ல..!

* பொறுத்தார் பூமியாள்வார் என்று சொல்வார்கள். அவர்களுக்கும் ஒரு குறை உண்டு. தங்களை சக்தியற்றவன் என்று உலகம் நினைக்கிறதே என்ற குறை தான் அது. அதை நினைத்து வருத்தப்பட தேவையில்லை.* உண்மையை ஒரு பெண்ணரசிக்கு ஒப்பிடலாம். அவளது திருவடியை மனிதன் சரணடைய வேண்டும் உண்மை மட்டுமே பிறவி என்னும் கடலைக் கடக்க உதவும் ஓடமாகவும், இன்ப உலகம் என்னும் சொர்க்கத்தை அடைய உதவும் வாசற்படியாகவும் இருக்கிறது. * பூக்களுக்கு தீங்கு நேராமல் வண்டு தேன் குடிப்பது போல, மக்களுக்கு ஊறு விளைவிக்காமல் வரிவசூல் செய்பவனே நல்லாட்சி புரியும் மன்னனாகத் திகழ்வான்.* பணம் இல்லாதவனுக்கு மனதில் எழும் ஆசை முள் போன்றது. அது அவனது மனதையே குத்தி வேதனைப்படுத்தும்.* முயற்சி இல்லாதவன் குடும்பவாழ்வு நடத்தும் தகுதியை இழக்கிறான். செயலில் ஆர்வம் காட்டும் சந்நியாசி துறவு இலக்கணத்தை மீறுகிறான்.* பிறர் பொருளை அபகரிப்பது, பிறர் மனைவி மீது ஆசை கொள்வது, தன்னிடம் அன்பு வைத்தவரைப் புறக்கணிப்பது ஆகியவை ஒருவனை அழித்து விடும்.* கீழான புத்தியுள்ளவர்கள், நிதானத்தை இழந்தவர்கள், சோம்பேறிகள், தற்பெருமை கொண்டவர்களுடன் ஆலோசனை செய்யக் கூடாது.* சகோதரிகள், வயதான சகோதரர்கள், ஏழை எளியவர்கள், நண்பர்கள் ஆகியோரைக் காப்பாற்றும் பொறுப்பு இல்லறத்தில் வாழ்பவனுக்கு உண்டு. * உண்மை பேசுதல், தர்மம் செய்தல், சுறுசுறுப்புடன் செயல்படுதல், பொறுமை, தைரியம், சகிப்புத்தன்மை இவை ஆறு நற்குணங்களையும் மனிதன் ஒருபோதும் கைவிடக் கூடாது.* துன்பத்தில் மனம் தளராமலும், ஆபத்து காலத்தில் நிதானம் இழக்காமலும் விரைந்து செயலாற்றுபவனே வாழ்வில் வெற்றி பெறுவான்.* உனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் துள்ளிக் குதிக்கத் தேவையில்லை. அதுபோல, பிறர் துன்பப்படுவது கண்டு மகிழவும் தேவையில்லை.* தன்னை நம்பி இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் இன்பம் காண்பவனே நல்லவன். பகைவனுக்கும் நல்லதை எண்ணும் மனம் படைத்தவனே உயர்ந்தவன்.* தூய்மையான, எளிதில் ஜீரணமாகும் சத்தான உணவுகளை உண்பவன், எப்போதும் ஆரோக்கியம் உள்ளவனாக இருப்பான். * முயற்சி சிறிதாக இருந்தாலும், விளையக்கூடிய பயன் பெரிதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நற்செயல்களில் மனதைச் செலுத்துபவனே அறிஞன்.* தர்மத்தை சத்தியமே தாங்கிப் பிடித்து உலகில் நிலைபெறச் செய்கிறது. ஒருவன் கற்ற வித்தைகள் இடைவிடாத பயிற்சியினால் நிலைநிறுத்தப்படுகிறது.* ஒழுக்கம் மனிதனுக்கு உயிர் போன்றது. அது இல்லாவிட்டால் பணமும், உறவுகளும் அவனுக்கு உதவாது. வாகனம் இருந்தால் பயணம் மட்டுமே எளிதாகும். ஒழுக்கம் இருந்தால் உலகில் எல்லாமே எளிதாக அமையும்.எச்சரிக்கிறார் விதுரர்