உள்ளூர் செய்திகள்

மூலிகை லிங்கம்!

முக்காலமும் செய்த பாவம் நீங்க, இனி செய்யாமல் இருக்க மூன்றடுக்குள்ள பிரான்மலை மங்கைபாகர் கோயிலைத் தரிசித்து வரலாம். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோயிலில் மூலிகை லிங்கம் விசேஷம்.தல வரலாறு:சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், முனிவர்கள் கைலாயம் சென்றதால், வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகைச் சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்குச் செல்லும்படி கூறினார் சிவன். அகத்தியருக்கோ, சிவனின் திருமணத்தைக் காண வேண்டுமென ஆசை. எனவே, தான் விரும்பும்இடங்களில் எல்லாம் இறைவனின் திருமணக்கோலத்தை தரிசிக்கும்படியான வரம் பெற்றார். அவ்வாறு திருமணக்கோலம் தரிசித்த தலங்களில் இதுவும் ஒன்று. இந்த கோயில் குன்றக்குடி ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.மூன்றடுக்கு சிவன் கோயில்: இம்மலையில் மூன்று அடுக்குகள் உள்ளன. கீழ் அடுக்கில் அம்பிகை குயிலமுதநாயகியுடன் கொடுங்குன்றநாதராகவும், மத்தியில் விசாலாட்சியுடன் விஸ்வநாதராகவும், மேல் பகுதியில் தேனாம்பிகையுடன் மங்கைபாகராகவும் சிவன் காட்சி தருகிறார். தேன் தினை:வேடுவத் தலைவன் நம்பிராஜனிடம் வளர்ந்த வள்ளியை, மணந்து கொண்டதால் முருகனுக்கு திருத்தணி, வள்ளிமலை ஆகிய தலங்களில் தேன், தினைமாவு நைவேத்யம் படைக்கும் வழக்கம் உள்ளது. சிவத்தலமான இங்கும் இதே நைவேத்யம் செய்கின்றனர். குறிஞ்சி (மலை) நிலத்தில் அமைந்த கோயில் என்பதால், இந்த நிலத்திற்குரிய தேன், தினைமாவும் படைக்கப்படுகிறது. பச்சரிசி தோசையும் படைப்பதுண்டு.தம்பதி ஒற்றுமை பூஜை:மேலடுக்கு கோயில் குடவறையாக அமைந்துள்ளது. இங்கு மங்கைபாகர், தேனாம்பிகையுடன் இணைந்து, 'அந்நியோன்ய' கோலத்தில் காட்சி தருகிறார். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தால், அவர்கள் ஒன்று சேரவும், திருமணத்தடைஉள்ளவர்களும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். மூலிகை லிங்கம்:மங்கைபாகர் சிலை, நவ மூலிகைகளின் சாறு கொண்டு செய்யப்பட்டது. எனவே, இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. பவுர்ணமியன்று புனுகு, சாம்பிராணி தைலம் சாத்துகின்றனர். இவரது சந்நிதியில் காசிராஜன் நிர்மாணித்த, 'உடையவர் லிங்கம்' இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதுண்டு. கும்பாபிஷேகத்தின்போது, சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் என்னும் மருந்து வைப்பது வழக்கம். ஆனால், இக்கோயிலில் சிவலிங்கத்துக்கு கீழே இவ்வாறு வைப்பதில்லை.லிங்கங்களின் மத்தியில் முருகன்:அசுரர்களை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க, முருகப்பெருமான் இங்கு இரண்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவை கொடுங்குன்றநாதர் சந்நிதி பிரகாரத்தில் சொக்கலிங்கம், ராமலிங்கம் என்ற பெயர்களில் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களுக்கும் மத்தியில் முருகன், பால ரூபத்தில் காட்சி தருகிறார்.ஒருமுறையே உடுத்துவார்:மங்கைபாகர் இத்தலத்தில் போக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு ஒருமுறை அணிவித்த வஸ்திரத்தை, மறுபடியும் அணிவிப்பதில்லை. ஒரேநாளில் பலமுறை வஸ்திரம் மாற்ற வேண்டி வந்தாலும், புது வஸ்திரமே அணிவிக்கப்படும். ஐப்பசி முதல் பங்குனி வரை சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. பால் குடம்:பைரவருக்கு, சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பால் குட வழிபாடு செய்கின்றனர். ஞாபக மறதி, பயந்த சுபாவம் உள்ளவர்கள் இவருக்கு சம்பா சாதம் படைத்து, வடை மாலை அணிவித்து நிவாரணம் கேட்கிறார்கள்.முதிய முருகன்:வயோதிகராக வள்ளியை ஆட்கொள்ள முருகன் வடிவெடுத்ததைப் புராணங்களில் படித்திருப்பீர்கள். ஆனால், அவரை சிலை வடிவில் காண வேண்டுமானால், இந்தக் கோயிலுக்கு வர வேண்டும். பெயரில்லா விருட்சம்:இத்தலத்தின் விருட்சம் உறங்காப்புளி. பல நூற்றாண்டுகள் பழமையான இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது. காய்ந்த நிலையிலேயே புளி உதிர்ந்து விடும். இதன் இலைகள் எப்போதும் விரிந்திருக்கும். மங்கைபாகர் சந்நிதிக்கு மேலே ஒரு பாறையில் 'பெயரில்லா விருட்சம்' என்ற பெயரில் ஒரு செடி உள்ளது. அரிசி பிரசாதம்:கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்ட பகுதி இது. சித்திரை பிரம்மோற்ஸவத்தில் 'பாரி உற்சவம்' என்னும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது, முல்லைக்கொடிக்கு பாரி தேர் கொடுத்த வைபவம் நிகழும். இருப்பிடம்:மதுரையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 65 கி.மீ., தூரத்தில் பிரான்மலை. திறக்கும் நேரம்:காலை 6- மதியம் 12, மாலை 4- இரவு 8. மங்கைபாகர் சந்நிதி மாலை 6.30 வரை திறந்திருக்கும்.போன்:94431 91300, 04577 246 170.