உள்ளூர் செய்திகள்

ஜோதிர்லிங்கத்தலம் (10) - திரியம்பகம் திரியம்பகேஸ்வரர்

திரியம்பகம் திரியம்பகேஸ்வரர் கோயில் மகாராஷ்டிராவில் பிரம்மகிரி மலை அடிவாரத்தில் கோதாவரி நதிக்கரையில் உள்ளது. இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு ஒரே பீடத்தில் லிங்க வடிவில் உள்ளது சிறப்பு. தல வரலாறு: சிவனுக்கும் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒரு முறை பிரம்மாவின் ஒரு தலை தவறான வார்த்தைகளைப் பேசவே, சிவன் அதை வெட்டி விட்டார். இதனால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. பிரம்மா சிவனை ஒரு மலையாக இருக்கும்படி சாபம் விடுத்தார். பதிலுக்கு சிவன் அந்த மலையில் பிரம்மா ஒரு லிங்கமாக இருக்க வேண்டும் என சபித்தார். இதனால் படைப்புத்தொழில் நின்றது. பார்வதி சரஸ்வதியுடன் சென்று திருமாலிடம் இதுபற்றி கூறினாள். அவர்கள் செய்த வேலைகளை தன்னால் செய்ய முடியாது எனக்கூறிய திருமாலும் லிங்கமாக மாறி விட்டார். மும் மூர்த்திகளும் லிங்கமாக, அதிலிருந்து ஜோதி வெளிப்பட்டது. இப்போதும் ஒரே பீடத்தில் மூன்று லிங்கங்கள் உள்ளன. இங்கு ஜடேஸ்வரி அம்மன், விநாயகர், நந்தி, பலராமர், ராமர், கங்கா,கோதாவரி, பாலாஜி சந்நிதிகள் இருக்கின்றன.கோயில் அமைப்பு: தங்கக் கவசத்துடன் கூடிய பெரிய கோபுரம் உள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் திறந்தவெளி உள்ளது. அதன் நடுவிலும் ஒரு கோபுரம் இருக்கிறது. கோபுரத்தின் உச்சியில் தங்க கலசமும், சூலாயுதமும் உள்ளன. கருவறை முன் அரை வட்ட வடிவ மண்டபம் உள்ளது. இதன் நான்குபுறமும் வாசல்கள் உள்ளன. மேற்குப்பக்கமாக நுழைந்து சுவாமியைத் தரிசிக்க வேண்டும். கருவறையில் லிங்கங்கள் இருக்கும் பீடத்திலிருந்து நீர் சுரக்கிறது. அதை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர். திங்கள் மட்டும் லிங்கத்திற்கு ஐந்துமுக தங்கக்கவசம் அணிவிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படும். சிவராத்திரிபூஜையும், கார்த்திகை மாத தேரோட்டமும் புகழ் பெற்றவை. 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பமேளா நடக்கிறது. இங்குள்ள குசாவர்த்தம் தீர்த்தத்தில் நீராடினால் பாவம் நீங்கும். பிரம்மகிரி மலையில் கோதாவரி உற்பத்தியாகும் இடத்தில்கவுதமரிஷியின் குகை உள்ளது. அங்கு 1008 லிங்கங்கள் உள்ளன.பெண்களுக்கு நிபந்தனை: கருவறைக்குள் ஆண், பெண் யாரும் சட்டை அணிவது கூடாது. சேலையை உயர்த்திக் கட்டி கிராமத்து ஸ்டைலில் கோயிலுக்குள் பெண்கள் வருகின்றனர். கருவறையில் அமர்ந்து பூஜாரி மூலம் அபிஷேகம் செய்ய வேண்டும். இங்கு கிடைக்கும் நாவல்பழம் மிகவும் சுவையானது.இருப்பிடம்: மும்பையிலிருந்து 190 கி.மீ., தூரத்திலுள்ள நாசிக் சென்று, அங்கிருந்து 30 கி.மீ., சென்றால் திரியம்பகம். - கண்டனூர் அர. சிங்காரவடிவேலன்