உள்ளூர் செய்திகள்

காமாட்சி கும்பாபிஷேகம் காஞ்சிக்கு கிளம்பியாச்சா!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பிப்.9ல் மகாகும்பாபி ஷேகம் நடக்கிறது. தல வரலாறு: ஒரு சிறுமியைத் தவிர வேறு யாராலும் அழிவு ஏற்படக்கூடாது என வரம் பெற்ற பண்டன் என்னும் அசுரன், தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள் அம்பிகையிடம் முறையிட, அவள் சிறுமியாக உருமாறி அசுரனை அழித்தாள். தேவர்களின் வேண்டுதலுக்காக காஞ்சிபுரத்தில் எழுந்தருளினாள். பக்தர்களின் 'காமம்' எனப்படும் விருப்பங்களை அருளும், கருணைக்கண் கொண்டவள் என்பதால் 'காமாட்சி' என பெயர் பெற்றாள். இந்தச் சொல்லை காமம் + அக்க்ஷி என பிரிக்க வேண்டும். 'அக்க்ஷி' என்றால் 'கண்களைக் கொண்டவள்' எனப் பொருள்.காமகோடி பீடம்: முப்பெரும் தேவியரின் அம்சமாக காமாட்சி அருளுகிறாள். 'கா' என்பது சரஸ்வதியையும், 'மா' லட்சுமியையும் குறிக்கும். உற்சவ அம்பிகையுடன் லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் இருக்கின்றனர். அம்பிகையின் திருநாமத்தை ஒருமுறை உச்சரித்தால், கோடி முறை சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இத்தலத்திற்கு 'காமகோடி பீடம்' என்ற பெயர் ஏற்பட்டது.ஸ்ரீசக்ரம்: முற்காலத்தில் இங்கிருந்த காபாலிகள், அம்பிகைக்கு மிருகங்களை பலியிட்டு பூஜை செய்தனர். இதனால் அம்பாள் உக்கிரமாக இருந்தாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்கு புனருத்தாரணம் (புதுப்பித்து உருவேற்றுதல்) செய்து அம்பிகையை சாந்தப்படுத்தினார். அம்பிகையின் அருளால் 'சர்வக்ஞ பீடம்' (எல்லாம் தெரிந்தவர்) பட்டம் பெற்றார். சிறப்பம்சம்: காமாட்சியம்மன் முன்புள்ள ஸ்ரீசக்ரத்திற்கே தினமும் முதல் பூஜை நடக்கிறது. பவுர்ணமியன்று இரவு 10:30 மணிக்கு மேல் அம்பாள் சன்னிதியில் திரையிட்டு, ஸ்ரீசக்ரத்திற்கு 'நவ ஆவரண பூஜை' நடக்கும். பாத தரிசனம்: கோவில்களில் அம்பிகை ஒரு காலை மடித்து, மற்றொரு காலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருவாள். இதனால் அம்பிகையின் பாதத்தை தரிசிக்க முடியாது. இங்கு காமாட்சி கால்களை மடித்து அமர்ந்திருப்பதால் பாதங்களை நம்மால் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் பாவ விமோசனம் தரக்கூடியது. இவளது தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சி: கும்பாபிஷேகத்தை ஒட்டி, பிப்.6 முதல் யாகசாலை பூஜை துவங்குகிறது. பிப்.9 காலை ஏழாம் கால யாகசாலை பூஜைக்குப் பின், காலை 9:45 மணிக்கு ராஜகோபுர கும்பாபிஷேகமும், 10:15 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு அம்பாள் வெள்ளி ரத பவனியும் நடக்கிறது. இருப்பிடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ., நேரம்: அதிகாலை 5:30 - மதியம் 12:00, மாலை 4:00 - இரவு 8.30 மணி.தொலைபேசி: 044 - 2722 2609.